ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் -மட்டு.பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி இது தொடர்பான உறுதியான நிலைப்பாடுகளை கூறி இருக்கின்றார்கள். அவர்களுடைய இந்த விடயத்திற்கு நாங்கள் முழுமையாக ஆதரவினையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கின்றோம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.


இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நினைவஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது. 

முன்னாள் மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை தமிரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத், முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதன் போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முகமாக தீபச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டப்பட்டதுடன் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு தாக்குதலின் மூலம் இந்த நாட்டில் பல அழிவுகளும் பிரச்சினைகளும் இடம்பெற்றிருந்தது. அன்றைய காலகட்டத்தில் ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு முக்கிய காரணமாக இது காணப்பட்டிருந்தது. 

மிக படு மோசமான முறையில் தங்களுடைய அரசியலுக்காகவோ அல்லது பயங்கரவாத நிகழ்வுகளுக்காகவோ ஒரு மதத்தின் பெயரால் மற்றைய மதத்தை மத ஸ்தலங்களை பொருளாதாரத்தையும் சீர்குலைக்கின்ற வகையில் இந்த தாக்குதல் இடம் பெற்றிருக்கின்றது. 

மிக முக்கியமாக இந்த விடயத்தில் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பலர் மரணித்திருந்தாலும் பலர் பின்னணியில் இருந்தவர்கள் தண்டிக்கப்படாமல் நீதி காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தில் எமது தமிழ் சமூகத்துக்கு பல அழிவுகள் இடம் பெற்று இருக்கின்றது. கடந்த காலங்களில் எல்லா சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான நீதி மறுக்கப்பட்டிருக்கிறது அலட்சியப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இந்த விடயத்தில் இதற்கான ஒரு நீதி கிடைக்கக்கூடிய சூழல் இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது. காலம் தாழ்த்தி கிடைக்கின்ற நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்லப்பட்டாலும் கூட அந்த நீதி நிச்சயமாக கிடைக்க வேண்டும். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பின்னணியில் இருந்தவர்கள் அரசியல் தராதரம் இன்றி அவர்களது அதிகார நிலை பற்றி சிந்திக்காமல் எல்லா குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களுடைய அல்லது பாதிக்கப்பட்டவர்களுடைய மிகப் பிரதானமான இந்த கிறிஸ்தவ மக்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

ஒரு மத அனுஷ்டான நிகழ்வு, உயிர்த்த ஞாயிறு தினத்திலே மக்கள் மரிக்கின்ற நிகழ்வானது மிக மனவேதனையையும் மிக ஒரு ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்ற நிகழ்வாகவும் இருக்கின்றது. இந்த விடயத்தில் அன்றைய காலத்தில் மக்கள் மிகப் பொறுமையாக மிக அமைதியாக இந்த விடயத்தை எதிர்கொண்டார்கள். ஆனாலும் இவ்வாறான இன மத குரோத செயல்கள் எதிர்காலத்தில் நடைபெற கூடாது.

இதற்காக இந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் .பாதிக்கப்பட்டவர்களுக்கான அந்த நியாயம் கிடைக்கப்பட வேண்டும். அவர்களுக்கான எதிர்காலம் பற்றிய ஒரு நிலையான தன்மை அல்லது இலங்கையில் எமது பிரதேசத்தில் வாழ்கின்றதற்குரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்கின்ற விடயத்தை நினைவு கூறும் முகமாக எமது இறந்து போன உறவுகளுக்கு ஒரு நினைவஞ்சலி செலுத்துகின்ற விடயமாகவும் நாம் இதனை செய்கின்றோம்.

மிக முக்கியமான விடயம் இந்த காலகட்டத்தில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கான நகர்த்தல்கள்,முன்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுடைய மன ஆற்றுகையை குறைப்பதற்காக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு எதிர்காலத்தில் இவ்வாறான செயல்பாடுகள் இடம்பெறாத வண்ணம் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக ஒரு மதத்தை ஒரு மத நிகழ்வு அனுஷ்டிக்கப்படுகின்ற போது அவற்றை குறி வைத்து மதங்களுக்கு இடையே இனங்களுக்கு இடையே இவ்வாறான ஒரு தீவிரவாத சிந்தனையை ஏற்படுத்துகின்ற இந்த நிகழ்வுகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி இது தொடர்பான உறுதியான நிலைப்பாடுகளை கூறி இருக்கின்றார்கள். அவர்களுடைய இந்த விடயத்திற்கு நாங்கள் முழுமையாக ஆதரவினையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கின்றோம். மிகப்பெரிய பலமாக இருக்கின்ற தமிழ் மக்களின் அரணாக இருக்கின்ற தமிழரசிக் கட்சி இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்டுகின்ற வன்முறையை கட்டுப்படுத்துகின்ற விடயத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் அந்த விடயத்தை நாங்கள் வரவேற்கின்றோம்.

இது நிச்சயமாக இடம்பெற வேண்டும் இது ஒரு அரசியல் தேர்தல் கால உறுதி மொழியாக அல்லாமல் இந்த மக்களுக்கு உறுதியான நிலைப்பாட்டை வழங்குவதாக அமைய வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு.

கடந்த காலத்திலிருந்த அரசியல் தலைவர்கள் தமது அரசியல்தேவைகளுக்காக பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்கள்.அவையெதுவும் நிறைவேற்றப்படவில்லை.