மட்டக்களப்பு தாயக செயலணியின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல்...







(சுமன்)


தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆவது நினைவுதினம் இன்று (19) மாலை நாவலடியில் அமைந்துள்ள அன்னைபூபதியின் நினைவு இல்லத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.


மட்டக்களப்பு தாயக செயலணியினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், இயேசுசபையைத் துறவி அருட்பணி த.ஜீவராஜ் அடிகளார், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், கிளிநொச்சியைச் சேர்ந்த சமூக சேவையாளரும், சிகரம் இலவசக்கல்வி நிலையத்தின் தலைவருமான கலா மற்றும் முன்பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவி செல்வி மேரிநிர்மலா உட்பட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அன்னையின் குடும்ப உறவுகள்,பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


இதன்போது அன்னையின் சமாதிக்கு சுடரேற்றி, மலர்மாலை அணிவித்து, மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


அத்தோடு அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவாக வருகை தந்தோருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.