(சுமன்)
பாதிக்கப்பட்ட தரப்பு ஆட்சிக்கு வந்தமையாலேயே பட்டலந்த வதை முகாம் பற்றிய விடயங்கள் வெளிவருகின்றன. ஆனால் வடக்கு கிழக்கிலும் பல வதை முகாம்களில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த உண்மைகளை வெளிக்கொணர் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதென்பது இந்த நாட்டில் நடவாத விடயம். எனவே பட்டலந்த போன்று வடக்கு கிழக்கிலும் அமைக்கப்பட்டிருந்த பல சித்திரவதை முகாம்கள் பற்றியும் உண்மைகளை வெளிக்கொணர இந்த அரசு முன்வரவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது பேசுபொருளாக இருப்பது பட்டலந்த சித்திரவதை முகாம் பற்றியதானது. 1988ம் ஆண்டு நடைபெற்ற இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் பற்றிய விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. ஜேவிபியினர் இரண்டாம் கட்ட புரட்சியினை மேற்கொள்ளும் போது அவர்களை அடக்குவதற்காக இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் செயற்பட்டு வந்தமை மட்டுமல்லாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் இதனுடன் சேர்த்து பேசப்படுகின்றது.
சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியின் போது இந்த முகாம் பற்றிய விசாரணைகள் ஆணைக்குழு மூலம் விசாரிக்கப்பட்டிருந்தாலும் அந்த அறிக்கை திறக்கப்படாமல் இருட்டில் புதைக்கப்பட்டு தற்போது 37 ஆண்டுகளுக்குப் பின்னர் அதுவும் ஜேவிபியினர் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் புதைக்கப்பட்ட அந்த உண்மைகள் வெளிக்கொணரப்படுகின்றன.
ஜேவிபின் ஆட்சி வந்திராவிட்டால் இந்த பட்டலந்த முகாம் பற்றிய விடயம் வெளியில் வந்திருக்க மாட்டாது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலேயே தற்போது இந்த படட்டலந்த சித்திரவதை முகாம் பற்றிய விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது என்பதே உண்மையும் இந்த நாட்டின் நிலைமையும்.
ஆனால் இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் போன்று வடக்கு கிழக்கில் பல முகாம்கள் சட்டரீதியாகவும் சட்ட முறையற்றும் காணப்பட்டன. அதிலும் மட்டக்களப்பில் சத்துருக்கொண்டான் வதை முகாம் மிகவும் பிரபலமானது 1990 களில் சத்துருக்கொண்டானை அண்டிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வகை தொகையின்றி சித்திரவதை செய்யப்பட்டும், கொலை செய்யப்பட்டும், பெண்கள் கற்பழிக்கப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும் இருந்தனர். இதே போன்று பல முகாம்கள் அழைத்துச் செல்லப்படுகின்றவர்கள் திரும்ப வரமுடியாதளவிற்கும் முகாம்கள் இருந்தன.
ஜேவிபியினர் சித்திரவதைப்பட்ட விடயம் ஜேவிபியினர் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் கண்டறியப்படுகின்றது எனில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டமையை கண்டறிவது என்பது இந்த நாட்டைப் பொதுத்த மட்டில் மாபெரும் கேள்வியே. ஏனெனில் இந்த நாட்டில் தமிழர்கள் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலையில் இந்த நாட்டில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எவ்வாறு கண்டறிவது என்ற கேள்வி உள்ளது.
எனவே ஜேவிபி அரசாங்கத்திடம் நாங்கள் கூறிக் கொள்வது என்னவெனில் தங்களது தோழர்களின் பாதிப்பை வெளிக்கொணர்வதற்காகவே இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தைக் கொண்டு வந்துள்ளீர்கள் என்று மற்றவர்கள் கூறுவதற்கு இடம் கொடுக்காமல், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகள், பாலியல் பலாத்காரங்கள், கடத்தல்கள், கணாமல் ஆக்கப்பட்ட விடயங்கள் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை முகாம்கள் தொடர்பிலும் ஆராய்ந்து அவை தொடர்பிலும் வெளிக்கொணர வேண்டும்.
அப்போதுதான் இது ஜனநாயகத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கருதப்படுமே தவிர இல்லாவிட்டால் தங்கள் கட்சியின் பாதிப்பிற்காக மேற்கொள்ளப்படுகின்ற பழிவாங்கும் செயலாகவே இது பார்க்கப்படும் என்று தெரிவித்தார்.