மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி –பாரதி இல்லம் சம்பியன்


மட்டக்களப்பில் பிரபல பெண்கள் பாடசாலைகளில் ஒன்றான மகாஜனக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் பாரதி இல்லம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
மகாஜனக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று மாலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் எஸ்.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலய கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ்.ரவிராஜ் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக திருமதி பி.சுகீஸ்வரன் கலந்துசிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் பிரபாகரன்,வலய உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார் உட்பட பலர் கலந்துசிறப்பித்தனர்.
இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டதை தொடர்;ந்து தேசியக்கொடி,பாடசாலை கொடி,இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு போட்டி நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு மற்றும் உடற் பயிற்சி கண்காட்சி நிகழ்வுகள் நடைபெற்றன.
அத்துடன் பல்வேறு விளையாட்டுத்துறையில் சாதனைகள் படைத்த மாணவர்களுக்கும் இதன்போது பதக்கங்கள்,வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இளங்கோ இல்லம்,கம்பர் இல்லம்,பாரதி இல்லம் என நான்கு இல்லங்களாக பிரிக்கப்பட்டு மாணவர்களின் உடற்திறனாய்வு போட்டிகள் நடைபெற்றுவந்த நிலையில் இந்த போட்டியில் 395 புள்ளிகளைப்பெற்று கம்பன் இல்லம் மூன்றாவது இடத்தினையும் 461 புள்ளிகளைப்பெற்று இலங்கோ இல்லம் இரண்டாவது இடத்தினையும் 549 புள்ளிகளைப்பெற்று பாரதி இல்லம் முதலாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டது.