முன்னரே குறிப்பிட்டபடி 7/12/2024 (நள்ளிரவு) அன்று உருவாகவுள்ள காற்றழுத்தம் 15/12/2024 ம் திகதிக்குப் பின்னர் முடிவுறும் என்று கருதப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்தத்திற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. கீழே அதன் அடுத்த கட்ட சாத்தியங்களைப் படமாக இணைத்துள்ளேன்.
மாதிரித்தரவுகளை வைத்துப் பார்க்கும்போது குறித்த இரண்டாவது தாழமுக்கம் 16/12/2024 அன்று வங்காள விரிகுடாவுக்குத் தெற்காக, மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் இருந்து 531km தொலைவில் தீவிரம் கொள்வதை அவதானிக்க முடிகிறது. இது ஒரு புயலாக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளன. கீழே ஒரு படம் இணைத்துள்ளேன், அதில் குறித்த தினத்தில் சூறாவளியின் கண் (Eye of the Cyclone) தோன்றுவதை அவதானிக்க முடிகிறது. அத்துடன் அமுக்கம் 1000mb ஆக வீழ்ச்சியடைகிறது. ஆகவே இரண்டாவது தாழமுக்கம் நிச்சயம் புயலாவதற்கான வாய்ப்புகளை மாதிரிப்படங்களும் தரவுகளும் காட்டிநிற்கின்றது.
1. 07/12/2024 தொடக்கம் 10/12/2024 வரை வடகிழக்கில் மிதமான மழையும் 11/12/2024 தொடக்கம் 15/12/2024 வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகக் கனமான மழையும் பெய்யும். விசேடமாக 12,13 ம் திகதிகளில் வடக்கில் மிகக் கனமழை பெய்யும்.
2. 16/12/2024 தொடக்கம் 24/12/2024 வரை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மிகக் கனமான மழை பெய்யக்கூடும். 16,17,18 தினங்களில் பொத்துவில் க்கும் தோப்பூருக்கும் இடைப்பட்ட பகுதியில் கனமழை பெய்யும்.
3. தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருமறைக்காடு, தேனி உள்ளிட்ட பகுதிகளில் குறித்த இரண்டு தாழமுக்கத்தினால் மிகக்கனமழை பொழியும்.
குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள திகதிகள் காற்றழுத்தத்தின் நகர்வைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு தினங்களுக்குள் மாறுபடும்.
மேலதிக விபரங்கள் அடுத்தசில நாட்களில் இற்றைப்படுத்தப்படும்.

