இலங்கைக்கு அண்மையில் கடந்த 23ஆம் திகதி வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் புயலாக உருமாற வாய்ப்புள்ளதால் வடக்கு கிழக்கு பகுதிகள் மேலும் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கு இடைப்பட்ட பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 90 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையம் காணப்படுகின்றது.இது புயலாக மாறினால் தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கின் 5 மாவட்டங்களிலும் கிழக்கில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலும் பெய்து வரும் கனமழை இன்று நண்பகல் வரை தொடர்வதற்கான வாய்ப்புள்ளது.
அத்துடன், இந்த தாழமுக்கம் புயலாக மாற்றமடைந்த பின்னர் கடற்கரையோரங்களில் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனக் கூறப்படுகின்றது.
2nd update
வங்காள விரிகுடாவில் கடந்த 23.11.2024 ல் தோற்றம் பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ( புயலுக்குரிய ஏது நிலைகளைப் பெற்று விட்டது) முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வட கிழக்கு திசையில் 215 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது.
இதன் நகரும் வேகம் மிக மிக குறைவாகவே உள்ளது. இன்று காலை 6.00 மணியளவில் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று இடையிடையே சற்று கன மழை கிடைக்கும்( உண்மையில் இது சற்று ஆறுதலான விடயம் ஏனெனில் இந்த மழை இடைவெளி பல இடங்களில் வெள்ள நீர் வடிந்து கடலைச் சென்றடைவதற்கான வாய்ப்பான காலம்).
ஆனால் நாளையும் அதாவது 29.11.2024 ( இன்று இரவு முதலே) மற்றும் நாளை மறுதினமும்(30.11.2024) வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தற்போது வடக்கு மாகாணத்தில் காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளது. இது எதிர்வரும் 30.11.2024 வரை தொடரும்.
இன்று காலை நிலவரப்படி பல குளங்களின் நீர் கொள்ளளவு மிக உச்ச நிலையை எட்டியுள்ளது. எனவே அக்குளங்களின் கீழுள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியம். இன்று குறைவான மழை கிடைக்கும் என்பது குளங்களுக்கு வருகின்ற நீரின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது ஆறுதலான விடயம்.
- நாகமுத்து பிரதீபராஜா -