வேப்பவெட்டுவான் பாடசாலையில் புலமைபரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டக்களப்பு மட்/மமே/ வேப்பவெட்டுவான் அ.த.க.பாடசாலையில் இம்முறை புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட அதிகஷ்டப் பிரதேசமாக உள்ள வேப்ப வெட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இம்முறை வெட்டுப் புள்ளிக்கு மேல் ந.நஸ்மிக்கா என்ற மாணவி 140 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் வெப்பவேட்டுவான் கிராமத்திற்கும் பெருமையை தேடிக்கொடுத்துள்ளார்.
அதேபோல் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்திபெற்று இம்முறை நூறு வீத சித்தியை பாடசாலை மட்டத்தில் இப் பாடசாலை பதிவு செய்துள்ளது.
குறித்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் பாடசாலை அதிபர் தவலெட்சுமி ஸ்ரீமுருகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் சர்வானந்தன், சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன், ஏறாவூர் பற்று கொம்மாதுரை வட்டார பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவகருமான நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள், புத்தகப் பைகளை வழங்கி வைத்தனர்.
ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரன் தனது சொந்த நிதியில் மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்ததுடன். சேவகம் நிறுவனத்தின் ஊடாக சிவபதி அறக்கட்டளை நிலையத்தின் நிதி உதவியில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும், தரம் நான்கு மாணவர்களுக்குமான புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் தவலெட்சுமி ஸ்ரீமுருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.சர்வானந்தன் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரும் சமூகசேவகருமான ந.நாகேந்திரன் சேவகம் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் அ.ஜெயராஜ், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.