மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் அதிரடி இடமாற்றங்கள் -புதிய ஆயரின் நடவடிக்கைக்கு குவியும் பாராட்டுகள்


மட்டக்களப்பு மறை மாவட்டத்தில்  அப்போஸ்தலிக்க பரிபாலகராக நியமிக்கப்பட்டுள்ள  ஆயர் அண்டன் ரஞ்சித் யாரும் எதிர்பாரா விதமாக பல இடமாற்றங்களை வழங்கியுள்ளார்.
திருச்சபையை பொறுத்த வரையில் அதன் மறைமாவட்டங்களுக்கு அதிகளவில் அதிகாரங்கள்  வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், அதிகாரங்களுக்கு உட்பட்டிருக்கும் முக்கியத் துறைகளில் பல இடமாற்றங்கள் மற்றும் மாறுதல்களை ஆயர் மேற்கொண்டுள்ளார்.குறிப்பாக, நிதிப் பொருப்பாளரை மாற்றம் செய்துள்ளார். கடந்த காலத்தில் இருந்த நிதி பொறுப்பாளரை பதிலாக புதிய நிதிப் பொறுப்பாளராக அக்கறைப்பற்றில் பங்குத் தந்தையாக இருந்த அருட்தந்தை ஸ்டனிஸ்லாஸை ஆயர்  நியமித்துள்ளார்.
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அரச சார்பற்ற நிறுவனமாக இயங்கக் கூடிய எஹெட் ஹரிட்டாஸ் நிறுவனத்தினுடைய இயக்குநராக இருந்த அருட்தந்தையை மாற்றி அதற்குப் பதிலாக அண்டனி ஜெயராஜ் அவர்களை நியமித்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மரியாள் இணைப் பேராலயத்திற்கும் புதிய அருட்தந்தையாக கல்முனை இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்த அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன்  அவர்களை நியமித்துள்ளார்.
மேலும், பல்வேறு நியமனங்கள் யாரும் எதிர்பாரா வண்ணம் இடம்பெற்றிருக்கின்றது.  இதனுடைய பின்னணியைப் பார்க்கின்ற போது முன்னாள் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்கள் பணி ஓய்வு பெற்றதை அடுத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் பெரும் குழப்பத்தோடும், நீதிமன்றம் வரை சென்றிருந்த மட்டக்களப்பு மறை மாவட்டம் இன்று ஒரு புதிய மாற்றத்தை நோக்கி நகர்வதாக கூறப்படுகின்றது.
(news- tamilwin)