பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் அற்ற மாநகரம் என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோறீஸ்வரர் ஆலயத்தினை சூழவுள்ள பகுதியில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்,மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம்,பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் இணைந்து இந்த சிரமதான பணியை முன்னெடுத்தது.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் வருடாந்த மஹோற்சவம் நிறைவுற்ற நிலையில் ஆலயத்தினை சூழவுள்ள பகுதியானது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளினால் நிரம்பிய நிலையில் காணப்படுகின்றது.
இதன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அதனை அண்டிவாழும் கால்நடைகள் உட்பட்ட விலங்கினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை காணப்படுகின்றது.
இதனை கருத்தில் கொண்டு இன்றைய தினம் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி நிசாந்தினி அருள்மொழி தலைமையில் மாவட்ட இளைஞர் உத்தியோகத்தர் மா.சசிகுமார்,பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் ஜீவரெட்னம் சஜிவ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் சூழலில் காணப்பட்ட பொலீத்தின் மற்றும் பிளாஸ்ரிக் என்பனவற்றினை அகற்றும் பணிகள் சிரமதான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் அற்ற மாநகரம் என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்,மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம்,பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் இணைந்து தொடர்ச்சியான சிரமதான பணிகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.