சமூக வலைத்தளங்களில் பொய் பிரசாரம் -மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்


மட்டக்களப்பு போதன வைத்தியசாலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவதனை கண்டித்து வைத்தியசாலை தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் போதனா வைத்தியசாலையின் நிர்வாக பணிமனை முன்பாக நடைபெற்றது.இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் சுமார் அரை மணி நேரம் தங்களது எதிர்ப்பினை பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் முன்னெடுத்தனர்.

வைத்தியசாலை நிர்வாகம் தாதியர் உரிமையை பாதுகாக்க வேண்டும், வியாபார நோக்கில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும், வதந்திகளை நம்பாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

கடந்த 31ம் வைத்தியசாலையில் நோயாளிகள் உள்ள விடுதி ஒன்றில் இடம் பெற்ற அசம்பாவிதம் தொடர்பாக அதில் பாதிக்கப்பட்டதாக ஒரு நபர் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட செய்திக்கு எதிராகவே இந்த எதிர்ப்பில் ஈடுபட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்களை வைத்திருப்பவர்கள் தங்களது வருவாயை ஈட்டிக் கொள்வதற்காக பொய்யான செய்திகளை பரப்பி சமூகத்தில் வைத்தியசாலை குறித்து ஒரு பதட்டமான சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவற்றை பொதுமக்கள் நன்கு விளங்கி வைத்தியசாலை தொடர்பாக தங்களுக்கு இருக்கக்கூடிய நல்ல அபிப்பிராயங்களை இல்லாது ஒழித்து விடாது வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவதற்கும் தங்கியிருப்பதற்குமான தங்களது நம்பிக்கையை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பொய்யான செய்திகளை பரப்புகின்ற நபர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் எனவும் வைத்தியசாலை நிர்வாகம் நோயாளர்களுக்கான சேவையை வழங்கும் போது சகல தரப்பினரையும் தங்களது கடமை சார்ந்த அக்கறையோடு செயல்பட வேண்டும் என்கின்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் எங்களது எதிர்ப்பை பதிவு செய்கின்றோம்.

உண்மையில் அந்த சம்பவம் பொய்யான ஒரு சம்பவம் கடமையில் ஈடுபடும் வைத்தியசாலை ஊழியர் எவரும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மது போதையில் கடமை செய்வதில்லை வேறு திணைக்களங்களைப் போன்று வைத்தியசாலை இல்லை இங்கு மேலதிகாரிகளின் மேற்பார்வை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் மேலதிகாரிகள் தங்களுடைய ஊழியர்களை பரிசீலனை செய்யும் போது மதுபோதையில் எந்த ஒரு ஊழியரும் கடமையாக்கினாலும் அவரை இலகுவாக கண்டறிந்து விட முடியும் எனவே ஏனைய திணைக்களங்களோடு ஒப்பிட்டு வைத்தியசாலை தொடர்பாக பிழையான தகவல்களை பரப்புவது பிழையானது.

குறித்த சம்பவமானது அன்று ஒரு நோயாளி தன்னுடைய மனைவியை இரவு வேளையில் வைத்திருக்க முற்பட்ட வேளை இன்னொரு நோயாளியுடன் கூட நிற்பவருடன் அசாதாரண நிலையை ஏற்படுத்த முற்பட்ட நிலையில் அந்த பெண்ணை விடுதியை விட்டு வெளியேற சொன்ன நிலையிலே இந்த பிரச்சனை உருவாகியது.

ஆகவே நோயாளி தனக்கு சாதகமாக சூழலை உருவாக்கும் நோக்கில் குறித்த ஊழியர் மது போதையில் இருந்ததாக பொய்யான தகவலை பரப்பி இருக்கின்றார்.ஆகவே மக்கள் இந்த விடயங்களில் கவனம் எடுக்க வேண்டும் என்கின்ற செய்தியை இவ்விடத்தில் வலுவாக பதிவு செய்கின்றோம்.

தயவுசெய்து சட்டத்தை நடைமுறை செய்பவரும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உறுதுணை செய்பவரும் பொய்யான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்புகின்ற யூரியூப் வியாபாரிகளுக்கு எதிராக தங்களுடைய விழிப்புணர்வை பதிவு செய்ய வேண்டும் என தாதியர்கள் சார்பாக ஏனைய சுகாதார ஊழியர்கள் சார்பாக மிக மன்றாட்டமாக பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த விடயம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் எழுத்து மூலமாக ஆவணத்தை வழங்கி இருக்கின்றோம் பாதிக்கப்பட்ட நபர் அந்த முறைப்பாட்டை செய்திருக்கின்றார் அதில் அந்த குற்றச்சாட்டானது சிறுவர் விடுதியெனவும் அந்த விடுதியில் குறித்த நோயாளி 16 நாட்களாக சிகிச்சை பெற்று வருவதாகவும் பொய்கூறி இருக்கின்றார்.

கடந்த 29 ஆம் தேதி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அந்த நோயாளி 30 ஆம் தேதி குறித்த விடுதிக்கு மாற்றப்பட்டு ஒரு நாள் மாத்திரமே அந்த விடுதியில் தரித்திருக்கின்றார் ஆகவே தொடர்ந்து பொய்யான செய்திகளை அவர் பரப்பி வருகின்றார்.

இது தொடர்பான முறைப்பாட்டினை எழுத்து மூலமாக வழங்கி இருக்கின்றோம் நிர்வாகத்திடம் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களிடமும் இந்த முறைப்பாட்டை செய்திருக்கின்றோம் சட்டம் தன் கடமையை செய்யும் என எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கின்றோம்.