இந்த நாட்டின் ஜனாதிபதியை தமிழர்களே தீர்மானிப்பாளர்கள் -சாணக்கியன் எம்.பி.(VIDEOS)

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால் இந்த நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிப்பவர்களாக தமிழர்கள் இருக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.வடமாகாணத்தில் கிளிநொச்சி என்னும் இடத்திற்குள்ளேயே செல்லமுடியாத அமைச்சர் ஒருவரின் ஆதரவினை கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவார் என நினைத்தால் அது ஒரு சவாலான விடயம் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது,தேசிய மக்கள் சக்தி அனுரகுமார திசாநாயகப்பினை ஜனாதிபதிவேட்பாளராக அறிவித்துள்ளது.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்த கட்சியில் போட்டியிடப்போகின்றார்,கூட்டமைப்பினை எவ்வாறு அமைக்கப்போகின்றார் என்பதே தற்போதுள்ள பிரச்சினை.
இன்று மொட்டு கட்சியும் பிரிந்த நிலையில் உள்ளது.மொட்டுக்கட்சி உருவாக்கப்பட்டது ராஜபக்ஸக்களின் எதிர்காலத்திற்காகும்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொறுப்புகள் அனைத்து பொறுப்புகளும் மகிந்த ராஜபக்ஸவிடம் இருந்தநேரத்தில் அதனை மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கிவிட்டு மொட்டுக்கட்சியை ஆரம்பித்தனர். அது சிறிலங்கா பொதுஜன பெரமுன என்பதை விட சிறிலங்கா ராஜபக்ஸ பெரமுன என்று அக்கட்சிக்கு பெயரை வைத்திருக்காலம்.இன்று அந்த கட்சி குழப்பநிலையில் உள்ளது.அந்த கட்சியில் உள்ள ஒரு சிலரை ஜனாதிபதி ரணில் அவர்கள் இலஞ்சமான அமைச்சு பதவிகளை வழங்கி அதில் சிலர் அமைச்சர்கள் பாரிய மோசடிகளில் ஈடுபட்டு இன்று ரணில் விசுவாசிகளாக மாறியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த மொட்டுக்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது.இன்று நாமல்ராஜபக்ஸ தனது தந்தையினைப்போன்று கும்பிடுபோட்டுக்கொண்டு விகாரைகள் எல்லாம் சுற்றிதிரிகின்றார்.இவர்கள் விகாரைகளை சுற்றிதிரிவதே ஒரு ஆபத்தான நிலைமை இந்த நாட்டுக்கு.அதேநேரம் மொட்டுக்கட்சின் பிரதான உறுப்பினரும் பசில் ராஜபக்ஸவின் வலதுகையுமான பிரசன்ன ரணதுங்க நாமல்ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் மொட்டு பிளவுபடும் என்று சொல்கின்றார்.இன்று அவர்களுக்குள்ளே குழப்பம் இருக்கின்றது.
எதிர்வரும் காலத்தில் தேர்தல் ஒன்று நடந்தால் அந்த சந்தர்ப்பத்தினை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.ஐந்து வருடத்திற்கு ஓரு முறை வரும் சந்தர்ப்பத்தினை மக்கள் சரியாக பயன்படுத்தாமல்விட்டால் அடுத்த ஐந்துவருடத்திற்கு எமது எதிர்காலம் மிக மோசமான எதிர்காலமாகவே இருக்கும்.ஐந்து வருடங்களுக்கு முன்பாக கோத்தபாயவினை ஆதரித்த மக்களும் இந்த மாவட்டத்தில் இருக்கின்றார்கள்.மக்கள் எதிர்நோக்கிய பாரிய பிரச்சினைகளுக்கு அந்த மக்கள் அன்று வழங்கிய வாக்குகளும் காரணமாகும்.
ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் கிளிநொச்சியில் விரட்டியடிக்கப்படுகின்றார்.மூன்று வாகனங்களில் வந்தவர் மோட்டார் சைக்கிளில் தப்பியோடும் நிலைக்கு வந்துள்ளார்.அதேகட்சியை சேர்ந்தவர்களின் சில அல்லக்கைகள் ஊடக சந்திப்புகளை செய்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கின்றனர்.கிளிநொச்சியில் உள்ள ஒரு கிராமத்திற்குள்ளேயே செல்லமுடியாத ஒரு அமைச்சரை வைத்துக்கொண்டு ரணில்விக்ரமசிங்க வெற்றிபெறும் நோக்கிமிருந்தால் அது சவாலன விடயமாகவே வரும்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்ந்து எமது கட்சி இதுவரையில் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை.கட்சியாக கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுப்போம்.எந்த தீர்மானமாகயிருந்தாலும் தமிழ் மக்கள்தான் இம்முறை இந்த நாட்டில் யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்கவேண்டும்.இன்று மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இலங்கை தமிழரசுக்கட்சியை தவிர ஏனைய கட்சிகளுக்கு பின்னால் மக்கள் நிற்பதுதெரியவில்லை.
மிகவிரைவில் இந்த நாட்டில் ஆட்சிமாற்றம் வரும்போது ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்புலமாகயிருந்து செயற்பட்டவர்களை சர்வதேச ஊடகம் ஒன்று வெளிப்படுத்தியிருந்தது.இதுவரையில் விசாரணையொன்று இல்லை.ஆட்சிமாற்றம் ஒன்றுவரும்போது இது தொடர்பான விசாரணை நடைபெற்று சிறைச்சாலையில் அதிதியாக இருக்கலாம்.தேர்தல் காலங்களில் மக்கள் சரியான தீர்மானங்களை எடுக்கவேண்டும்.