திருக்கோவில் பகுதியில் பாடசாலை மரதன் ஓட்டப் போட்டியின் போது மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நேற்று (11) திருக்கோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 16 வயதுடைய மாணவன் திடீர் நோய் நிலைமை காரணமாக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.
மாணவனின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனை அம்பாறை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
எவ்வாறாயினும், வெப்பமான வானிலை காரணமாக வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு கல்வி அமைச்சு அண்மையில் அனைத்து பாடசாலை அதிகாரிகளுக்கும் விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்திருந்தது.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்தார்.
இதேவேளை, மரதன் போன்ற நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு முன்னர் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டுமென விசேட வைத்தியர் சன்ன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
"இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒருவேளை, துரதிர்ஷ்டவசமாக, நீரிழப்பு காரணமாகவும் இந்த நிலை ஏற்படலாம். தொலைதூரப் போட்டிகளில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற்று உடல்நிலையை உறுதி செய்து, இல்ல விளையாட்டு விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்ப வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு இதுபோன்ற நிலை இருந்தால், பெற்றோர்கள் அதைப் பற்றி கருத்திற் கொள்ள வேண்டும். இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு நீரிழப்பு ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே தயார்படுத்த வேண்டும்."