அம்பாறை திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற 16 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட குறித்த மாணவன் போட்டி நிறைவுற்றதும் வகுப்பறைக்கு சென்றுள்ளார் இதன்போது வயிற்றுக்குள் கொழுவி பிடிப்பதாகக் கூறி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றதாகவும் பின்னர் அவசர சிகிச்சைக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் போதிய வைத்திய உபகரணங்களைக் கொண்ட அம்பியூலன் வண்டி இல்லாததன் காரணமாக அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்ற முடியாமல் போனதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த மாணவனின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வான நிலையில் மாணவனின் உயிரிழப்புக்கு வைத்தியசாலையின் கவனயீனமே காரணம் என மாணவர்களும், இளைஞர்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அப்பகுதியில் கலகம் அடக்கும் பொலிசார் உட்பட படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.