ரிக்ரொக் மூலம் கஸ்டத்தை வெளிப்படுத்தியவருக்கு வாழ்வாதார உதவி வழங்கிய சுவிஸ் உதயம்


கிழக்கு மாகாணத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்கள் மற்றும் மாணவர்களின் நலநன கருத்தில்கொண்டு சுவிஸ் உதயம் அமைப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள வறிய நிலையில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வம்மிவட்டவான் பிரதேசத்தில் உள்ள மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்டை கருத்தில்கொண்டு தையல் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.

சுவிஸ் நாட்டை சேர்ந்த விஜயகுமார்,சாந்தி தம்பதியினரின் இரண்டு புதல்வர்களான லுகீர்சன்,லுகீர்த்தனன் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த உதவிகளை வழங்கும் நிகழ்வு இன்று சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளை தலைவர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளரும் சமூக சேவையாளருமான க.துரைநாயகம்,செயலாளர் அம்பலவாணர் ராஜன்,சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையின் உபதலைவர் கன.வரதராஜன்,செயலாளர் திருமதி றொமிலா செங்கமலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ரிக்ரொக் சமூக ஊடகம் ஊடாக உதவி வழங்குமாறு குறித்த பெண் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் சுவிஸ் நாட்டை சேர்ந்த விஜயகுமார்,சாந்தி தம்பதியினரால் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.