அரகலயவிலிருந்து நெப்போலியன் தோன்றியதைப் போல நமது நாட்டின் சகல பிரிவினரதும் அதிருப்தி ஏற்படுத்திய அரகலயவின் குழந்தையாக நீங்கள் ஜனாதிபதியாகி உள்ளீர்கள். இன்னுமொரு புதிய அரகலயவில் நீங்கள் புதையக் கூடாது என்பதே எனது அவாவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான கோவிந்தன் கருணாகரம் கேட்டுக்கொண்டார்.
உங்கள் புத்தி ஜீவித் தனத்தை சொற்பொழிவுக்குள் மட்டும் மட்டுப்படுத்தாது உங்கள் அறிவு ஞானத்தை வாத விவாதத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தாது நாட்டின் அபிவிருத்திக்கு அர்ப்பணியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
2024 வரவு- செலவுத்திட்டத்தின் மூலமான எனது ஒட்டு மொத்த சுருக்கமான கணிப்பு “தம்பி கால்நடை பேச்சு பல்லக்கு” அது போலத்தான் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அடைய முடியாத இலக்குகளை எடுத்துரைத்து நாட்டையும் நாட்டு மக்களையும் கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்துள்ளார் என்றும் கருணாகரன் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற வரவு- செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் என்பது வெறுமனே இலக்கங்களுக்கும் வார்த்தை ஜாலங்களுக்கும் மட்டுப்பட்டதல்ல. மாறாக நாட்டின் எதிர்காலம் தொடர்பான, நாட்டின் ஆக்கபூர்வமான,அறிவு பூர்வமான, விஞ்ஞான பூர்வமான, அடையக் கூடியதான முன்மொழிவுகளை எடுத்தியம்பவேண்டும். அது நம்பகத்தன்மைகொண்டதாக இருக்க வேண்டும் என்றார்.
வெறுமனே விலைவாசி உயர்வைப் பிரகடனப்படுத்துவதாகவோ , நிவாரணங்களை எடுத்துரைப்பதாகவோ இருக்கக் கூடாது. ஆனால் கடந்த பல தசாப்தங்களாக எம் ஆட்சியாளர்கள். வரவு-செலவுத்திட்டத்திற்கு பிழையான வரைவிலக்கணத்தை மக்கள் நம்பும் படி வளர்த்துவிட்டார்கள். அத்தகைய பிழையான வரைவிலக்கணத்துக்கு உட்பட்ட வரவு-செலவுத்திட்டமே இந்த வரவு-செலவுத்திட்டமாகும் என்றார்.
எமது ஜனாதிபதி இன்னும் பழைய புண்ணைப் பிச்சைக்காரன் தோண்டுவதைப்போல வங்குரோத்தான நாட்டை நான் பாரமெடுத்தேன். அழைப்பு விடுத்த எவரும் நாட்டைப் பாரமெடுக்கமுன்வராத போது நான் நாட்டைப் பாரமெடுத்தேன். என்று பண்டைக் கதைகள் பேசுவதில் இனிப் பயனில்லை. எவரும் இத்தகைய சவால் மிக்க நிலையில் நாட்டை ஏற்க முன்வராத போது இத்தகைய சவால்களைச் சமாளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் அரசியலமைப்பின் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப நீங்கள் ஜனாதிபதி ஆகியுள்ளீர்கள்.
எனவே இன்று உங்கள் முன்புள்ள முக்கிய கடமை பண்டைப் பழங்கதைகள் பேசுவதல்ல. உங்கள் முன்னுள்ள சவால்களை வெற்றி கொண்டு காட்டுவதேயாகும் என்றார்.