முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்தும் நீதியின் சுயாதீனத்தை வலியுறுத்தியும் இன்று மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினால் பணி பகிஸ்கரிப்பும் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலுமிருந்து விலகி சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணி பகிஸ்கரிப்பினை முன்னெடுத்ததுடன் மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.பிரேம்நாத் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக கவன போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் ஊர்வலமாக சென்று மீண்டும் கட்டிட தொகுதிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட சட்டத்தரணிகள் ‘பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்,நீதித்துறையில் அரசியல் தலையீடு வேண்டாம்,நீதித்துறையினை அச்சுறுத்தாதே,நீதித்துறை சுதந்திரத்திற்காய் குரல்கொடுப்போம்,சட்டத்தின் முன்யாவரும் சமம்”போன்ற பல்வேறு சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிபதி சரவணராஜாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையானது முழு நாட்டினது நீதித்துறைக்கு பாரிய அச்சுறுத்தலையும் அழுத்ததினையும் ஏற்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.பிரேம்நாத் தெரிவித்தார்.