‘நிலையான சமாதானத்திற்காக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்’ என்னும் தொனிப்பொருளில் மூவின இளைஞர் யுவதிகள் பங்கேற்கும் தேசிய கதிர்காம யாத்திரை நிகழ்வு இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பின் அடிப்படையில் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இந்த கதிர்காம யாத்திரை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாமாங்கம் விக்னேஸ்வரா திருத்தொண்டர் மண்டபத்தில் நடைபெற்றது.மூவினங்களையும் சேர்ந்த சுமார் 150 இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சரத்சந்திரபால தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்பமான இந்த நிகழ்வில் இராமகிருஸ்ணமிசன் தலைவர் சுவாமி விஸ்ணு மகராஜ்,ஜெயந்திபுரம் விகாராதிபதி தம்மானந்த தேரர்,அருட்தந்தை பிறைன் அடிகளார்,மௌலவி எம்.எப்.பாஹீம் ஆகியோர் ஆன்மீக அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கலந்துகொண்டார்.இதன்போது தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் காலாராணி,திருமலை உதவிப்பணிப்பாளர் கொட்டின்கடுவ,அம்பாறை உதவிப்பாளர் திருமதி கங்கா சந்தமாலி,முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பணிப்பாளர் குகேந்திரா உட்பட அதிகாரிகள்,இந்து,பௌத்த,இஸ்லாமிய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்ற இளைஞர் யுவதிகள் அங்கு வழிபாடுகளை முன்னெடுத்ததை தொடர்ந்து பாதயாத்திரை ஆரம்பமானது.
நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இளைஞர் யுவதிகள் மத்தியில் நல்லிணக்கத்தின் அவசியம் என்பதன் அடிப்படையில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கு அமைவாக இந்த பாதயாத்திரை நடாத்தப்படுகின்றது.
இந்த பாதயாத்திரையில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலுமிருந்து மூவினங்களையும் சேர்ந்த 150க்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















