மட்டக்களப்பில் அதிகரிக்கும் வாய்ப்புற்றுநோய் -மட்டக்களப்பில் விழிப்புணர்வில் இறங்கிய வைத்தியர்கள்ள


மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான இடங்களில் பல் வைத்திய நிலையங்கள் உள்ளபோதிலும் பொதுமக்கள் அதனை பயன்படுத்துவது குறைவான நிலையில் உள்ளதன் காரணமாக அதிகமானோர் இறுதி நிலையிலேயே வாய்ப்புற்றுநோய் அடையாளம் காணப்படுவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பல்நோயியல் பிரிவு பொறுப்பதிகாரி பல் வைத்திய நிபுணர் டாக்டர் கே.முரளிதரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் சர்வதேச வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமும் நடமாடும் சேவையின் ஊடாக வாய் பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டது.

புன்னகைப்பதற்காக உங்கள் வாய்ச்சுகாதாரத்தையும் பல்சுகாதாரத்தையும் எண்ணி நீங்கள் ஆடம்பரப்படுங்கள் என்ற தொனிப்பொருளில் 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச வாய்ச்சுகாதார தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பல் வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

இதன்போது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியவற்றிலிருந்து இரண்டு விழிப்புணர்வு பேரணியானது ஆரம்பமாகி மட்டக்களப்பு நகர் ஊடாக வருகைதந்து மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் பணிப்பாளர் டாக்டர் கே.சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பல்நோயியல் பிரிவு பொறுப்பதிகாரி பல் வைத்திய நிபுணர் டாக்டர் கே.முரளிதரன் உட்பட வைத்தியர்கள்,தாதியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் நடமாடும் பல்சிகிச்சை வாகனத்தில் அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகளின் சாரதிகள்,முச்சக்கர வண்டி சாரதிகளின் வாய்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு சிறியளவிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டஅதேநேரம் ஏனைய சிகிச்சகைளுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதன்போது கருத்து தெரித்த பல் வைத்திய நிபுணர் டாக்டர் கே.முரளிதரன்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களும் மீன்பிடியில் ஈடுபடுவர்களுமே அதிகளவில் வாய்ப்புற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.அவர்களிடையே வெற்றிலை பாவனையும் அதனையொட்டிய புகைத்தல்,மதுபாவனையும் இருப்பதன் காரணமாக அவர்களிடையே வாய்ப்புற்றுநோய் அளவு அதிகளவில் காணப்படுகின்றது.

வாய்க்குள் வரும்நோய்கள் புற்றுநோய்களாக தோற்றம்பெறுவதில்லை.அதற்கு முந்திய அறிகுறிகளாகவே தோற்றம்பெறுகின்றது.அந்தவேளையில் அவர்கள் அடையாளப்படுத்தப்படும்போது அவர்களுக்கு புற்நோய் ஏற்படுவதை தடுப்பதற்கான வழிகள் காணப்படுகின்றபோதிலும் அறியாமை,கவனத்தில்கொள்ளப்படாமை காரணத்தினால் அதுபுற்றுநோயாக தோற்றம்பெறுகின்றது.புற்றுநோயானது தடுக்ககூடிய ஆரம்பநிலைகள் இருக்கின்றபோதிலும் அவர்கள் சிகிச்சைபெறாமல் மிகவும் பி;ந்திய நிலையிலேயே வைத்தியசாலை வந்து சிகிச்சைபெறுகின்றனர்.

பிந்திய நிலையில் வருபவர்களுக்கு குறைந்தளவிலேயே சகிச்சையளிக்ககூடியதாகயிருக்கும்.எவ்வளவு முயற்சிசெய்தாலும் நான்கு ஐந்து வருடங்களுக்கு மேல் உயிர்வாழவைப்பது கஸ்டமான விடயம்.

மட்டக்களப்பு பூராகவும் பற்சிகிச்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் 30 நிலையங்கள் காணப்படுகின்றன.ஆனாலும் மக்கள் அதன் சேவையினைப்பெற்றுக்கொள்வது மிகவும் குறைவானதாக காணப்படுகின்றது.அவர்களில் அறிகுறி மிகவும் பிந்திய நிலையில் வருவதன் காரணமாக சிகிச்சையளிப்பதும் கஸ்டமான நிலையிலேயே உள்ளது.