மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய தேசிய பாடசாலையில் 166வது சாரண ஸ்தாபகர் நிகழ்வு அதிபர் கே. சொர்ணேஸ்வரனின் தலைமையில் ருத்ராகரன் மற்றும் திருமதி. எஸ். தமிழ்செல்வன் ஆகிய சாரண தலைவர்களின் பங்குபற்றுதலுடன் பாடசாலையின் முன்னால் உள்ள ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கத் தலைவரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வி. வாசுதேவன் கலந்து கொண்டதுடன் அவர் உரையாற்றுகையில் நாட்டிற்கான நற்பிரஜைகளை உருவாக்குவதில் சாரணியம் முன்னிலை வகிப்பதாக குறிப்பிட்டார்.
அத்துடன் மாணவர்களிடையே பரவிக்காணும் போதையிலிருந்து நீங்கள் மாத்திரமல்லாது உங்களது நண்பர்களையும் பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியும் சிவானந்தா பழைய சாரணிய சங்க ஆலோசகர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சாரணிய ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் பயன்தரு மரக்கன்றுகளும் சாரணர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








