மட்டக்களப்பு கிரானில் சட்டவிரோத காணி அபகரிப்பு!!


மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிவிலுள்ள புணானை, ஜெயந்தியாய மற்றும் றிதிதென்ன ஆகிய பிரதேசங்களில் புகையிரத பாதையை ஊடறுத்து செல்லும் அரச காணிகளை அப் பிரதேசங்களைச் சேர்ந்தோர் சிலர் சட்டவிரோதமான முறையில் அபகரித்து வருவதாக பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து அப் பிரதேசங்களுக்கு திம்புலாகல ராகுலாங்கார நாகினி தேரர் கடந்த சில தினங்களுக்கு முன் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு நிலமைகளை அவதானித்தார்.

புணானை பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் சிலருடன் தேரர் குறித்த இடங்களுக்கு சென்று காணிகளில் கட்டடம் கட்டுவோர் மற்றும் சுற்று வேலி ஆமைப்போரிடம் விடயம் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தொவிக்கும்போது,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளை கவனத்தில் கொண்டு அரசானது சிறுதானியப் பயிர் செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக நெடுங்சாலைகள் போக்குவரத்து அமைச்சின் கீழ் புகையிரத பாதையினை அண்மித்த நிலங்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்யும் முகமாக நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது.

இவ்விடயம் தொடர்பாக அறிந்த மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்தோர் சிலர் காணிகளை பிடித்து தென்னை மரங்களை நாட்டியும், கற்களைக் கொண்டு கட்டிடங்களை அமைத்து அரச கொள்கைக்கு எதிராக செயற்படுகின்றனர். அத்துடன் இப் பிரதேசங்களின் ஊடாகவே யானைகளின் போக்குவரத்து நடமாட்டங்கள் உள்ளன.

இவர்களின் இவ்வாறான செயற்பாட்டினால் யானைகளின் வாழ்வியல் செயற்பாட்டிலும் பாதிப்பு ஏற்படும்.

எனவே அரசு இவ்விடங்களில் சட்டத்திற்கு விரோதமாக புகையிரத திணைக்களத்திற்குரிய காணிகளை அபகரிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினை நாடி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேரர் இதன் போது தெரிவித்தார்.