வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 45ம் நாள் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்திலுள்ள இறாலோடைக் கிராமத்தில் 14.09.2022 இன்று இடம்பெற்றது.
இப் போராட்டமானது இறாலோடைக் கிராமக் கடற்கரையில் மக்கள் ஒன்றிணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும். எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, எங்கள் நிலங்களை அபகரிக்காதே என்று பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது கிராம மக்கள் தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளான அத்துமீறிய காணி அபகரிபுக்கள், கடல் வளங்களை சுறண்டுதல், குடிநீர் பிரச்சினை, பூர்த்தி செய்யப்படாமல் உள்ள வீட்டுத்திட்டங்கள், பூர்த்தி செய்யப்படாமல் உள்ள நீர்த்தாங்கி பணி மற்றும் மீன்பிடியை ஜீவனோபாயம தொழிலாக கொண்ட மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்காமை உள்ளிட்ட தமது பிரச்சனைகள் தொடர்பாக தமது கோரிக்கைகளை அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சென்றடையும் வகையில் ஊடகங்களிடம் முன்வைத்தனர்.
அத்தோடு இறாலோடை கிராமத்தில் பாரிய பிரச்சனையாக உள்ள குடிநீர் மற்றும் வீதி புணரமைப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்துமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் சிவில் அமையத்தின் இணைப்பாளர் ஜெ.கோபிநாத், சிவில் அமையத்தின் உத்தியோகத்தர் இ.ரமேஷ், சிவில் சமூகம் சார்ந்த செயற்பாட்டாளர்கள், பிரதேச மீனவ மற்றும் விவசாய சங்கத்தினர், பிரதேச அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.