அரிசி,பருப்பு உள்ளிட்ட ஐந்து அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு!!


லங்கா சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசி,பருப்பு உள்ளிட்ட ஐந்து அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் மேலும் ஒரு சில பொருட்களின் விலை குறைவடையும் என சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

சதொச நிறுவனத்தின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை மற்றும் சந்தை கட்டுப்பாடு ஆகியவற்றில் சாதகமான நிலை தற்போது காணப்படுவதால் 5 அத்தியாவசிய பொருட்களின் விலை முதற்கட்டமாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பொன்னி சம்பாவின் விலை 21 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் நாடு அரிசியின் விலை 2 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 25 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 2 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் பிரவுன் சீனி 25 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய 5 அத்தியாசிய பொருட்களை நுகர்வோர் லங்கா சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக தட்டுப்பாடில்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.

லங்கா சதொச விற்பனை நிலையம் ஊடாக எதிர்வரும் நாட்களில் மேலும் ஒருசில அத்தியாவசிய பொருட்களின் விலையினை குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கமையவே லங்கா சதொசவில் முட்டை விற்பனை செய்யப்படும்.லங்கா சதொசவில் அத்தியாவசிய உணவு பொருட்களை தடையின்றி விநியோகிக்க உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.