மட்டக்களப்பு மாநகர சபையின் 62வது சபை அமர்வு இன்று மாநகர சபா மண்டபத்தில் மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
வழமையான சம்பிரதாயங்களுடன் ஆரம்பமாக சபை அமர்வின்போது மாநகரசபை முதல்வரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து இதன்போது கடந்தகால செயற்பாடுகள் பற்றிய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதிலும் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் அதன் நிதி பங்கீடு தொடர்பாகவும் கருத்துக்கள் முன்மொழியப்பட்ட போது சில வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.
மாநகரசபை அமர்வின்போது மாநகரசபை முதல்வருக்கு எதிராக முறையற்ற வகையில் செயற்பட்டதாக கூறி மாநகரசபை சபை உறுப்பினர் வசந்தகுமாரை வெளியேற மாநகரசபை முதல்வர் பணித்தபோதும் அவர் வெளியேற மறுத்த நிலையில் பொலிஸாரின் உதவியுடன் வெளியேற்றுமாறு கோரியபோது மாநகரசபையின பிரதி முதல்வர் அவரை பொலிஸாரைக்கொண்டு வெளியேற்றுவது மாநகரசபையின் கௌரவத்தினை பாதிக்கும் செயற்பாடு எனவும் மாநகரசபை உறுப்பினர் மன்னிப்புக்கோருமிடத்து அவரை எச்சரித்து சபையில் அனுமதிக்குமாறு கோரிய நிலையில் அதனை மாநகரசபை உறுப்பினர்கள் பலர் ஆமோதித்ததன் காரணமாக மாநகரசபை உறுப்பினர் வசந்தகுமார் தனது செயற்பாட்டுக்கு மன்னிப்புக்கோரியதை தொடர்ந்து மாநகரசபையின் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.
இதிலும் குறிப்பாக மட்டக்களப்பு புகையிரத குறுக்கு வீதியானது புனரமைக்கப்பட்டதில் சில செலவீனங்களில் மதிப்பீட்டு தொகையினையும் பார்க்க மேலதிகமாக 300,000 ரூபா காணப்படுவதால் அந்த மேலதிகமாக செலவுசெய்த தொகையினை பொறியியலாளர் செலுத்த வேண்டும் என பிரேரணை கொணடுவப்பட்டபோது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டது.
இதன்போது குறித்த செலவினம் எதற்கான காரணத்தினால் இவை நாம் மறுபடி செலுத்த வேண்டும் என மாநகரசபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் நிலவியது அதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக பொறியியலாளர் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தினார் அதனை அடுத்து இந்த செலவினத்தை அனைத்து அதாவது பொறியியலாளர் மாத்திரமன்றி அவருக்கு கீழ் உள்ள குழுவினரும் இதனை பங்கு கொள்ள வேண்டும் அவ்வாறு இல்லையெனில் மாநகரசபையின் நிதியை வைத்து இந்த தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என மாநகர சபை உறுப்பினர்களால் கூறப்பட்டது.
மக்களின் பாவனைக்காக செய்யப்பட்ட இந்த வேலைக்கு மேலதிக செலவினம் ஏற்பட்டுள்ளது இதனைத் தனியொரு நபர் மீது செலுத்துவது முறையற்றது எனவே அதற்குப் பொறுப்பான அத்தனை உத்தியோகத்தர்கள் பொறுப்பேற்க வேண்டும் இல்லை எனில் மாநகரசபையின் நிதியில் இவற்றை செலுத்த வேண்டுமென உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள்,மாநகருக்குள் உள்ள முக்கிய திணைக்களங்களின் உத்தியோகத்தர்களின் எரிபொருள் தேவையினை பூர்த்திசெய்யும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் ஏற்கனவேயுள்ள டீசல் நிரப்பு பகுதியில் பெற்றோhல் நிரப்பு தாங்கியையும் அமைப்பதற்கான முன்மொழிவும் முதல்வரினால் முன்வைக்கப்பட்டு சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் படுகின்ற துன்பங்களை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மாநகரில் எரிபொருள் விநியோகத்தினை சீர்செய்ய கலந்துரையாடவேண்டும் என மாநகரசபை உறுப்பினர் ஜோன்பிள்ளை அவர்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அத்துடன் எரிபொருளுக்கான பெண்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இவர்கள் தினமும் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகிவருவதுடன் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் தற்காலிகமான மலசல கூடம் அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என மாநகரசபை உறுப்பினர் சசிகலா வேண்டுகோள் விடுத்தார்.
அத்தோடு முறையான ஒரு செயல்பாடு மூலமாக எரிபொருள் வழங்குவது தொடர்பாகவும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் இதன்போது உரையாடபட்டது.
இன்றைய அமர்வின்போது விஷேடமாக ஒரு திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது அதாவது ஆரம்ப கட்டமாக உள்ளக போக்குவரத்து வசதி ஒன்றினை ஏற்படுத்தும் முகமாக அதாவது சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு 8 தடவைகள் குறித்த சில பகுதிகளில் பஸ் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு அதற்கான முன்மொழிவு இன்று சபையில் எடுத்துரைக்கப்பட்டது.
இப் போக்குவரத்து திட்டத்தில் பொதுமக்களுக்கு 50 ரூபாயும் பாடசாலை மாணவர்களுக்கு 40 ரூபாய் அறவிடுவதாகவும் அதே நேரத்தில் தற்பொழுது ஆரம்பிக்க இருக்கும் இந்த திட்டத்திற்கு எரிபொருளை முதல்கட்டமாக மாநகரசபையின் மேலதிக எரிபொருளில் இருந்து வழங்குவதற்கு முன்மொழியப்பட்டது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக குறிப்பிட்ட சில இடங்களுக்கு மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் படிப்படியாக இந்த திட்டத்தினை முக்கியமான சில பகுதிகளுக்கும் விஸ்தரிப்பது தொடர்பாகவும் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டது.