பொருளாதார நெருக்கடியாக இந்த காலத்தில் தமிழர்கள் தற்சார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டிய இக்கட்டான காலத்தில் உள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார மேம்பாடு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்கிவரும் சுவிஸ் உதயம் அமைப்பின் தலைமையகத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் சுவிஸை தலைமையகமாகவும் கிழக்கு மாகாணத்தினை செயற்பாட்டு ரீதியான இடமாகவும் கொண்டுள்ள சுவிஸ் உதயம் அமைப்பிற்கான தலைமையகத்திற்கான கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,சுவிஸ் உதயம் தாய் சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதித்தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் க.வரதராஜன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன்,பிரதிச்செயலாளர் நடனசபேசன் உட்பட சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும் பல்வேறு உதவி திட்டங்களை வழங்கிவரும் சுவிஸ் உதயம் அமைப்பு தனது சேவையினை விரிவுபடுத்தும் வகையில் இந்த அலுவலகத்தினை அமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த மாநகர முதல்வர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்சார்பு பொருளாதாரத்தினை முன்னெடுக்கும்போது எங்களுக்கு தேவையானவற்றை நாங்களே உற்பத்திசெய்யும் வகையிலும் அதன்மூலம் எமது பொருளாதாரத்தினை ஓரளவுபூர்த்திசெய்யக்கூடியதாகயிருக்கும்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வெற்றுக்காணியிலும் பயிர்செய்கையினை ஊக்குவிக்கும் வகையிலும் அதன்மூலம் தமது தேவையினை பூர்த்திசெய்யும் வகையிலான திட்டத்தினை முன்னெடுப்பது குறித்த மாநகரசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஓரளவாவது உற்பத்திகளை மாநகருக்குள் பெறுவதற்கான முயற்சியை முன்னெடுக்கவேண்டும்.