மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள ஆபத்து -அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை


மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைப்போக அறுவடை காலம் என்ற காரணத்தினால் அறுவடைக்கான எரிபொருளைப்பெற்றுத்தர அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதுடன் அறுவடை நடைபெற்றால் அதற்கான உத்தரவாக விலையினையும் நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது கருத்துகளை முன்வைத்தனர்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைப்போக அறுவடைக்கு தயாராகும் வகையில் விளைச்சல்கள் காணப்படுகின்றது.ஆனால் அறுவடைக்கு தேவையான எரிபொருட்கள் கிடைக்காத காரணத்தினால் அறுவடையினை ஆரம்பிக்கமுடியாத நிலை காணப்படுகின்றது.

தற்போது வயல்களில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகி நிலத்தில் பழுத்து விழும் நிலையேற்பட்டுள்ளது.அறுவடையினை நாங்கள் ஆரம்பிக்காவிட்டால் அவை பாரிய நஸ்டத்தினை விவசாயிகளுக்கு ஏற்படும் நிலையுள்ளது.

இடைப்போக செய்கையினை மேற்கொள்ளும்போது பாரிய செலவிலேயே மேற்கொள்ளப்பட்டது.இந்த அறுவடையினை சரியாக செய்யாவிட்டால் விவசாயிகள் எழமுடியாத வகையில் பாரிய நஸ்டத்தினை எதிர்நோக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டால் தமது அறுவடை செய்யும் நெல்லை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகள் இணைந்து 64கிலோ நிறையுடைய ஈர நெல்லு மூடைக்கு 9500ரூபாவும் காய்ந்த நெல்லுக்கொண்ட மூடைக்கு 11000ரூபா வழங்கவேண்டும் என்ற தீர்மானத்தை மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் எடுத்துள்ளோம்.

ஒரு நிர்ணய விலையினை தருமாறு அமைச்சரிடமும் நெல்சந்தைப்படுத்தும் சபையிடமும் கோரிக்கை விடுத்தபோதிலும் இதுவரையில் எந்த விலையும் நிர்ணயிக்கப்படாத நிலையிலேயே இந்த செயற்பாட்டினை முன்னெடுத்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் எங்கள் மத்தியில் உள்ளது.டீசல் மிக அவசியமான தேவையாகவுள்ளது.அதனை வழங்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடையினை வெற்றிகரமாக முடித்து நாட்டில் உணவுப்பஞ்சத்தினை நிவர்த்திக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்கமுடியும்.

நெல்லின் விலையில் வீழ்ச்சி ஏற்படுமானால் அடுத்த போக நெற்செய்கை முன்னெடுப்பதா இல்லையா என்பதை சிந்திக்கவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவர்.ஆகையினால் நாட்டின் முதுகெழும்பான விவசாயத்தினை பின்னடைய செய்யாமல் அரசாங்கம் உரிய விலையினை வழங்கி விவசாயிகளை வாழவைக்கவேண்டும்.

2021ஆம்ஆண்டு சேதனப்பசளையில் விவசாயத்தினை மேற்கொண்டு பாரிய நஸ்டத்தினை நாங்கள் அடைந்தோம்.அதற்கான நஸ்ட ஈடுகள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.

வங்களில் கடன்களைப்பெற்றே விவசாய நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடுகின்றோம். 2021ஆம்ஆண்டு பெரும்போகத்திற்கு கடன்களைப்பெற்று விவசாய நடவடிக்கைகளை செய்து நஸ்டமடைந்தாலும் வங்கிகடன்களை செலுத்திவிட்டோம்.தற்போது அரசாங்கம் ஐந்து ஏக்கருக்கு குறைவான விவசாயத்திற்காக பெறப்பட்ட வங்கி கடனை முற்றாக இரத்துச்செய்வதாக அறிவித்துள்ளது.அந்த விடயம் கூட மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கப்பெறவில்லை. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட விவசாயிகள் முன்கூட்டிய விவசாய செய்கையில் ஈடுபடுவதனால் இவ்வாறான சலுகைகள் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.

கடந்த வருடம் கடன்பெற்று பெரும்போகம் செய்து கடுமையான நஸ்டங்களை எதிர்கொண்டபோதிலும் இந்த ஆண்டும் கடன்களைப்பெற்று சிறுபோக விவசாய செய்கையினை செய்துள்ளோம்.பாரிய கடன்களுக்கு மத்தியிலேயே நாங்கள் விவசாயம் செய்துள்ளோம்.இந்த நிலையில் எரிபொருள் பிரச்சினை,நிர்ணய விலைபிரச்சினை காரணமாக விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் உள்ளனர்.இவ்வாறான நிலைமை நீடிக்குமானால் பாரிய நெருக்கடிகளை விவசாயிகள் எதிர்கொள்ளும் நிலையேற்படும்.

விவசாயிகளின் பிரச்சினைகளை கருத்தில்கொண்டு விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு,இன்றைய நாட்டின் சூழ்நிலையினை கருத்தில்கொண்டு விவசாயிகளின் எரிபொருள் பிரச்சினைகளை தீர்க்க உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.