டெங்கு, சிக்குன்குனியா நோயைத் தடுக்கும் பெண் நுளம்புகள் கண்டுபிடிப்பு!!


டெங்கு, சிக்குன்குனியா நோயைத் தடுக்கும் பெண் கொசுக்களை கண்டுபிடித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக இயக்குநர் அஷ்வனி குமார் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு பருவ மழை தொடங்கிய சில நாள்களிலேயே நாட்டில் பல்வேறு இடங்களில் டெங்கு, சிக்குன்குனியா நோய்ப் பரவல் அதிகரித்து வருகின்றன.

இதனைத் தடுக்க பல்வேறு ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகளை மேற்கொண்டு வந்த நிலையில், நோய்ப் பரவலை தடுப்பதற்காக பெண் கொசுக்களை தயார் செய்துள்ளதாக புதுவை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஞ்ஞானி அஷ்வனி குமார் கூறுகையில்,

“புதுவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் கொசுக்களை உற்பத்தி செய்து ஆண் கொசுக்களுடன் இனப் பெருக்கத்தில் விடவுள்ளோம். இந்த கொசுக்கள் டெங்கு கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்து வைரஸ்கள் இல்லாத லார்வாக்களை உற்பத்தி செய்கின்றன. இதன் மூலம் நோய்ப் பரவலை தடுக்கலாம்.

தற்போது கொசுக்களை கண்டுபிடிக்கும் பணி நிறைவடைந்துள்ளன. குறிப்பிட்ட இடைவெளியில் பெண் கொசுக்கள் மற்றும் முட்டைகளை வெளியிட வேண்டும் என்பதால், மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த கொசுக்கள் வெளியிடப்படும்.”

ஆண்டுதோறும் டெங்கு, சிக்குன்குனியாவால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் சூழலில், பருவ மழை தீவிரமடைவதற்கு முன்னதாகவே இந்த கொசுக்களை வெளிவிட்டால் உயிரிழப்புகள் தடுக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.