வருமானம் குறைந்த குடும்பத்திற்காக இந்து பௌத்த மதங்களின் துறவிகள் இணைந்து அமைத்து வழங்கிய வீடு

 


வி.சுகிர்தகுமார் 

இந்து பௌத்த மதங்களின் துறவிகள் நண்பர்களாக இணைந்து 45 வருடங்களை தாண்டிய நிலையில் அவர்களது தெய்வீக நட்பை பிரதிபலிக்கும் வகையில் வருமானம் குறைந்த ஒரு குடும்பத்திற்கான வீடொன்றை அமைத்து கொடுத்து அதனை திறந்து வைத்த நெகிழ்ச்சி மிகு நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று இடம்பெற்றது.

இன நல்லிணக்கத்திற்குரிய சிறந்த முன்னுதாரணமான நிகழ்வில் 1975 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சிறந்த நண்பர்களாக வாழ்ந்துவரும் ரிசிகேச சுவாமிகள் ஸ்ரீமத் நித்தியானந்தா சரஸ்வதி மகராஜ் ஜி மற்றும் வணக்கத்திற்குரிய அத்தி பூஜ்ய உடுவன ரத்னபால நாயக்க தேரர் ஆகியோர்களது நட்பை வெளிப்படுத்தும் வகையிலே இந்நிகழ்வு நடைபெற்றது.
இன மத மொழி கடந்து ஒற்றுமையை உணர வைக்கும் இச்சிறப்பு நிகழ்வில் அன்பானந்தா மகராஜி மற்றும் பௌத்த துறவிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினர். நிகழ்வில் ஆலையடிவேம்பு முருகன் ஆலய தலைவர் ஆர்.ஜெகநாதன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக வருகைதந்த துறவிகளை இந்துமத முறைப்படி வீட்டின் உரிமையாளர்கள் வரவேற்றனர்.
பின்னர் இந்து பௌத்த முறைகளின் படி இறைவழிபாடும் ஆசியுரையும் இடம்பெற்றது.
இதன் பின்னராக வீட்டின் நினைவுப்பெயர்பலகையினை துறவிகள் இணைந்து திரை நீக்கம் செய்து வைத்ததுடன் நாடாவை வெட்டி வீட்டினை திறந்து வைத்தனர்.
இறுதியாக சுவாமி அறையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.
குறித்த வீட்டினை அமைப்பதற்கான நிதியை வணக்கத்திற்குரிய அத்தி பூஜ்ய உடுவன ரத்னபால நாயக்க தேரர் மற்றும் சுவாமிகள் ஸ்ரீPமத் நித்தியானந்தா சரஸ்வதி மகராஜ் ஜி வழங்கியிருந்தமை சிறப்பம்சமாகும்.
இன ஜக்கியம் நல்லுறவு என நாம் பேசிக்கொண்டிருந்தாலும் அதற்கு உண்மையான செயல் வடிவம் கொடுத்திருக்கும் இரு துறவிகளும் இணைந்து அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.