மின்சார விநியோகம் மற்றும் மருத்துவம் அத்தியாவாசிய தேவை- ஜனாதிபதியால் வர்த்தமானி!!


மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வெளியிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் வியாழக்கிழமை ( 9) அதிகாலை முதல் ( 00.01 மணி ) நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ள நிலையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

2283/22 எனும் இலக்கத்தை உடைய இந்த வர்த்தமானி அறிவித்தலானது 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவிற்கமைய ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மின்சாரம் மற்றும் மருத்துவம் சார் நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மின்சாரம் வழங்கல், மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஈடுபடும் எந்தவொரு அரச கூட்டுத்தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளையொனறினால் வழங்கப்படும் சேவைகள் வழமையான பொதுமக்கள் வாழ்வை கொண்டுநடத்துவதற்கு இன்றியமையாததெனவும் மேற்கூறப்பட்டுள்ள சேவைகளுக்கு இடையூறாகக்கூடுமென அல்லது தடையாகக்கூடுமென்பதைக் கருத்திற்கொண்டு எந்தவொரு அரச கூட்டுத் தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச்சங்கம் அல்லது அவற்றின் கிளையொன்றின் மூலம் வழங்கப்படும் பின்வரும் சேவைகள் அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

1. மின்சாரம் வழங்கல்

2. வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள் , மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவகையிலான சகல சேவைகள் , வேலைகள் அல்லது தொழில் பங்களிப்பு.