ஏறாவூர் பொதுச் சந்தையை “சிங்களச் சந்தை” என அடிக்கடி குறிப்பிடுவதில் ஆளுநர் ஆர்வம்!!


ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச் சந்தையை “சிங்களச் சந்தை” எனக் குறிப்பிடுவது ஆளுநர் ஆர்வமாக உள்ளதாக அதிருப்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கங்களிலும் இதர சமூக வலைத் தலங்களிலும் ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச் சந்தையை “சிங்களச் சந்தை” எனக் குறிப்பிட்டு வருவதாக ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஞாயிறன்றும் 26.06.2022 ஆளுநரின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்ட “ஏறாவூர் சிங்களச் சந்தை” விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இது குறித்து உடனடியாக எதிர் வினையாற்றிய ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம். ஸரூஜ், நீங்கள் குறிப்பிட்டது போன்று அல்ல. ஏறாவூர் நகர சபைக்குச் சொந்தமானது அது எப்போதும் “பொதுச் சந்தை” தான். அது சிங்களச் சந்தையல்ல எனவே இதனை மாற்றிக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த எதிர் வினைக்குப் பின்னர் ஆளுநரின் செய்திக் குறிப்பில் “ ஏறாவூர் பொதுச் சந்தை” என மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் 2021.11.11 அன்று ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச் சந்தையை “சிங்களச் சந்தை” எனக் குறிப்பிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பெக்ஸ் கடிதம் அனுப்பிய விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கி எதிர்வினையாற்றியதன் விளைவாக நகர சபை பொதுச் சந்தை என ஆளுநர் மாற்றிக் கொண்டதாக ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார்.

ஆயினும், எல்லோருக்கும் பொதுவான ஏறாவூர் நகர சபைக்குரிய பொதுச் சந்தையை “ஏறாவூர் சிங்களச் சந்தை” என ஆளுநர் அடிக்கடி உச்சரிப்பது மறைவான உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்துவதாக பிரதேச தமிழ் பேசும் மக்கள் தெரிவிக்கின்றனர். இனவாதத்தின் காரணமாக நாடு வங்குறோத்து நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் இந்தத் தறுவாயிலும் கூட ஒரு பொதுச் சந்தையை பேரினவாத உடமையாகச் சிந்திப்பது வேதனையளிப்பதாக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.