அக்கரைப்பற்றில் வீடொன்றில் பணமும் நகையும் கைத்தொலைபேசிகளும் கொள்ளை

 


வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 7ஆம் பிரிவில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 20 இலட்சத்து 40 ஆயிரம் பணமும் 13 பவுண் நகையும் இரு கைத்தொலைபேசிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வியாபார நிலையங்களை நடத்திவரும் தந்தை மற்றும் மகன் வசித்து வரும் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

; வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்டவர்களும் இச்சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் உறக்கத்திலிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்ட நேரத்திலும் அதன் பின்னரும் வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்த பின்னர் தூக்கத்திற்கு சென்றுள்ளனர் இதன்; பின்னர் இரவு 11 மணியளவில் வியாபார நிலையத்தை மூடிய மகன் வீடு திரும்பி உணவருந்திவிட்டு  உறக்கத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் வங்கியில் வைப்பிலிடுவதற்காக வைத்திருந்த பணத்தையும் தான் அணிந்திருந்த மாலையினையும் கட்டிலின் கீழ் வைத்துவிட்டே தூங்கியுள்ளார். ஆனாலும் அதிகாலை 2 மணியளவில் மனைவியின் கூக்குரல் கேட்டு எழுந்த வீட்டின் உரிமையாளர் தனது மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த மாலையினை காணாது கண்டு கேட்டபோதே மாலை களவாடப்பட்டதையும் அவரது கைத்தொலைபேசி பறிபோனதையும் அறிந்து கொண்டார்.

இதனை கண்ட மகன் தனது அறையினை பார்த்;தபோது அவர் வைத்திருந்த பணம் நகை மற்றும் கைத்தொலைபேசி உள்ளிட்டவையும் கொள்ளையிடப்பட்டதையும் தெரிந்து கொண்டார். இச்சம்பவத்தில் திருடன் எவ்வாறு உள்ளே நுழைந்துள்ளான் என்பது தெளிவாக தெரியாத நிலையில் வீட்டின் உரிமையாளர் பதிவு செய்த முறைப்பாட்டினை அடிப்படையாக வைத்து
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் பல்வேறு கோணங்களில் முன்னெடுத்து வருகின்றனர்.