மட்டக்களப்பு மாநகர சபையின் சிறுவர்நேய மாநகரக் கட்டமைப்பு வேலைகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இன்று (20.05.2022) மாநகர சபையில் இடம்பெற்றது.
சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் முறைகள் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரமானது யுனிசெப் மற்றும் செரி(CERI) நிறுவனங்களுடன் இணைந்து சிறுவர் நேய மாநகர செயற்றிட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
இந் நிலையில் மாணவர்களின் தேக ஆரோக்கியத்தினைக் கருத்திற்கொண்டு, உடற்பருமன் அதிகரிப்பினால் அவதியுறும் மாணவர்களின் நலன் கருதி முதற்கட்டமாக மாநகர சபைக்குட்பட்ட 06 பாடசாலைகளில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பயிற்சி நிலையங்களை அமைத்தல் தொடர்பாகவும், சிறுவர் பூங்காக்களை புனரமைப்பு செய்வது தொடர்பாகவும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்படி, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி, வின்சன்ட் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலை, புனித சிசிலியாஸ் மகளீர் கல்லூரி, இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இப் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், இதன் தொடர்ச்சியாக சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளிலும் உடற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் இச் செயற்பாடுகளுடன் பலாமீன்மடு சிறுவர் பூங்காவும் புனரமைக்கப்படவுள்ளது.
இக் கலந்துரையாடலில், யுனிசெப் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளுக்கான கொரியா நாட்டின் தொண்டர் கேயோரேடூ, யூனிசெப் நிபுணத்துவ அலுவலர் டில்ருக்சி பிருந்தன், செரி(CERI) நிறுவனத்தின் திட்ட அலுவலர் மைக்கல் நிரோஷன் தேவராஜா, இணைப்பாளர் றினோஷா பிரசன்னா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
