திருக்கோவில் கல்வி வலயத்தின் 47 ஆவது பாடசாலை திறந்து வைப்பு

 


வி.சுகிர்தகுமார் 

ஒழுக்கமுள்ள மாணவர்கள் உருவாக்கப்படுவதுடன் அவர்கள் ஒற்றுமையான சமுதாயமாக வாழ்வதற்கும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.  அதேநேரம் பாடசாலைகள் சமூகத்தின் சொத்தென மதித்து செயற்பட பெற்றோர்கள் முன்வரவேண்டும் எனவும் திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

திருக்கோவில் கல்வி வலயத்தின் 47 ஆவது பாடசாலையாக நிர்மாணிக்கப்பட்ட ஆலையடிவேம்பு கோட்டத்திற்குட்பட்ட புளியம்பத்தை கமு திகோ கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

பாடசாலையின் அதிபர் அ.நல்லதம்பியின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் யோ.ஜெயசந்திரன் பிரதேச செயலாளர் வி.பபாகரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் பிரதி கல்வி பணிப்பாளர்களான எஸ்.சுரனுதன் திருமதி ஏ.சி.என்.நிலேபரா உதவிக்கல்விப்பணிப்பாளர் பி.பரமதயாளன் மற்றும் கோட்டக்கல்விப்பணிப்பாளர் கங்காதரன் ஆயுர்வேத வைத்திய அதிகாரி த.புவிதாகரன் கால்நடை வைத்திய அதிகாரி கோகுலரஞ்சனி பிரதேச சபை உறுப்பினர் என்.நவநீதராஜ் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் 1976 ஆம் ஆண்டு பிறந்த பிரதேசத்தின் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அதிதிகள் மாணவர்களின் பேண்ட் வாத்திய குழுவின் இசையோடு அழைத்து வரப்பட்டனர். பின்னர் பாடசாலையின் பெயர்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றலும் இடம்பெற்றது.
பின்னராக மாணவி ஒருவர் நாடாவை வெட்டி  பாடசாலையின் கட்டடத்தை திறந்து வைத்தார்.
இதேநேரம் பாடசாலையின் மண்டபத்தில் தேவாரம் மற்றும் தமிழ்மொழி வாழ்த்துப்பா பாடப்பட்டதுடன் இடம்பெற்ற நிகழ்வில் 1976 ஆம் ஆண்டு பிறந்த பிரதேசத்தின் பழைய மாணவர்கள் இணைந்து பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான புத்தகப்பையினை அன்பளிப்பாக வழங்கி வைத்தனர்.

இதன் பின்னராக இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதேச செயலாளர் வி.பபாகரன்... அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'  என்ற பாரதியின் வரிகளை நினைவு படுத்தி பெரும்புண்ணியமாக அமைந்துள்ள கல்விக்கு கண்ணாக அமைந்துள்ள பாடசாலையின் திறப்பு விழாவிற்கு ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் பாடசாலையின் எதிர்கால வளர்ச்சிக்கு பிரதேச செயலகத்தினால் முழுதான பங்களிப்பு வழங்கப்படும் என்றார்.
இப் பாடசாலையானது புளியம்பத்தை கிராமம் மற்றும் அதனை அண்டிய மகாசக்தி கிராமம், கவடாப்பிட்டி கிராம ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு ஓர் சிறந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.