கல்லடி திருச்செந்தூரில் சுவிஸ் உதயம் அமைப்பினால் குடும்பம் தலைமைதாங்கும் பெண்ணுக்கு உதவி

கிழக்கு மாகாண சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் குடும்பத்தினை தலைமை தாங்கும் பெண்னொருவருக்கு சில்லறைக்கடையொன்று அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லடி,திருச்செந்தூர் 02ஆம் குறுக்கில் உள்ள குடும்பம் ஒன்றிற்கே இந்த கடை அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கல்விப்பணி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகளை சுவிஸ் உதயம் அமைப்பு தாய்ச்சங்கம் ஊடாக கிழக்கு மாகாண சுவிஸ் உதயம் அமைப்பு முன்னெடுத்துவருகின்றது.

இதனை கையளிக்கும் நிகழ்வு இன்று சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலனின் ஒழுங்கமைப்பிலும் தலைமையிலும் நடைபெற்ற நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் தலைவர் மு.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சுவிஸ் உதயம் தாய் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சுவிஸ் உதயம் தாய் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் குமாரவேல் தர்மபாலன் அவர்களின் சுமார் இரண்டு இலட்சம் ரூபா சொந்த நிதியில் கடை அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் பிரதி தலைவரும் ஓய்வுநிலை வலய உதவி கல்வி பணிப்பாளருமான கண.வரதராஜன்,பிரதித்தலைவர் அக்கரைப்பாக்கியன்,உப செயலாளர் நடனசபேசன்,உறுப்பினர்களான இ.ஜீவராஜ்,யுதர்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பெண் தலைமை தாங்கும் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை நோக்காக கொண்டு இந்த சில்லறைக்கடை அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் செயலாளர் தெரிவித்தார்.