மட்டக்களப்பு- வாகரை இறால் வளர்ப்பு திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் இறால் வளர்ப்பு திட்டத்தை இரத்துச் செய், எங்கள் வளத்தை சுரண்டாதே' எனும் தொணிப்பொருளில் நீதி வேண்டும் எனக் கோரி பிரதேச மக்கள் கையெழுத்துப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைவாக கதிரவெளி, தட்டுமுனை, புளியங்கண்டலடி, அம்பந்தனாவெளி, பால்சேனை மற்றும் பல கிராமங்களில் மக்கள் தமது கையொப்பத்தினை இட்டு மேற்படி இறால் பண்ணை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கும் மற்றும் நீதி மன்ற நடவடிக்கைக்காகவும் எடுத்துச் செல்லும் வகையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் தாம் இறங்கியுள்ளதாக கிராம மக்களும் கிராமிய சிவில் அமைப்புக்களும் தெரிவித்துள்ளனர்.

மேற்படி போராட்டத்தினை பிரதேச மீனவர் அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், மாதர் சங்கங்கள், பண்ணையாளர்கள், ஆலய அமைப்புக்கள், மக்கள் பேரெழுச்சி இயக்கம், வடக்கு கிழக்கு முன்னேற்றக் கழகம் போன்ற அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததாக அறியமுடிகின்றது.

அண்மையில் இத்திட்டத்தை தடைசெய்யக்கோரி பிரதேச மக்களும் சிவில் அமைப்புக்களும் வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.