ஜேர்மன் நாட்டின் வெவேரியன் பாராளுமன்ற உறுப்பினரும் ஜேர்மன் முனிச் நகரத்தின் முன்னாள் முதல்வருமான ஹெப் மொணாட்செடர் மட்டக்களப்பு மாநகரசபைக்கு நண்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு மாநகர முதல்வர் தி.சரவணபவனுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலினை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பில் மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பொறியியலாளர் திருமதி.சித்திராதேவி லிங்கேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
நிகழ்வில் மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவின் பொறுப்பாளர் வி.பிரதீபன் 2004 இல் ஏற்பட்ட சுனாமியினைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து மொணாட்செடர் முனிச் நகரத்தின் முதல்வராக இருந்த காலத்தில் செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்தார்.
பின்பு முனிச் மாநகரசபையினால் மாநகரசபைக்கு வழங்கப்பட்ட அலுவலக பஜிரோ வாகனம் உள்ளிட்ட கனரக வாகனங்களையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து சுனாமியினால் தாய் , தந்தை மற்றும் கணவனை இழந்த பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்களுக்கு ரூபாய் 26 மில்லியன் செலவில் 2008 இல் திராய்மடுவில் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளையும் மாநகரசபையில் பணிபுரிந்த சுனாமியினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட 20 வீடுகளையும் பார்வையிட சத்துருக்கொண்டானுக்கு களவிஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.