சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும், விற்பனை சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டு இன்றைய தினம் (09) திகதி பழைய கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த விசேட சந்தையினை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் திறந்துவைத்தார்.
இதன் போது அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது அருணலு கடன் வழங்கும் திட்டத்தின் ஊடாக கடன்பெறும் பயனாளிகளுக்கான கடன் தொகைகள் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், சமுர்த்தி பயனுகரிகளினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த உற்பத்திகளை அதிதிகள் பார்வையிட்டதுடன் கொள்வனவிலும் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் கே.பரமலிங்கம், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்களென பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், இவ் விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் நாளைய தினமும் (2022.04.10) குறித்த இடத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.