படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் 17 ஆம் நினைவு தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் வெள்ளிக்கிழமை 29ஆம் திகதி மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது.
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும் நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும் தமிழ் மக்களின் உரிமையினை அங்கிகரிக்ககோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் க. சத்தியசீலன், உள்ளூராட்சி உறுப்பினர்கள் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணித் தலைவர், உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகபிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.