களுவாஞ்சிகுடியில் பிளாஸ்ற்றிக் பெரலுக்குள் வீழ்ந்து 3 வயது சிறுமி உயிரிழப்பு...!!


மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் சிறியரக பிளாஸ்ற்றிக் பெரல் ஒன்றினுள் தவறி வீழ்ந்து 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

களுவாஞ்சிகுடி மாரியம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள வீட்டுத்திட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் குறித்த சிறுமி வீட்டிலிருந்த வேளை தண்ணீர் பைப் இருக்கும் இடத்திற்குச் சென்று அங்கு இருந்த சிறியரக பிளாஸ்ற்றிக் பெரலில் கையிலிருந்த ஜம்பு பழத்தை போட்டுள்ளார்.

பின்னர் அந்த பழத்தை மீண்டும் எடுப்பதற்கு முயற்சித்த போது சிறுமி தலைகீழாக அந்த சிறிய ரக பெரலினுள் தவறி வீழ்ந்துள்ளார். 23 அங்குலம் உயரம் கொண்ட அந்த சிறியரக பெரலில் 8 அங்குலம் அளவில் அதனுள் தண்ணீர் இருந்துள்ளது.

இதன்போது குறித்த சிறுமியின் தந்தை உறவினர் வீடொன்றிற்கு வெளியில் சென்றிருந்த இந்நிலையில் தங்கை வீழ்ந்துள்ளதை அவதானித்த சிறுமியின் 5 வயது அண்ணா வீட்டிற்குள் சமைத்துக் கொண்டிருந்த தாயிடம் கூறியுள்ளார் உடன் விரைந்து மகளை மீட்டதாய் அயலவர்களின் உதவியுடன், உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். எனினும் சிறுமி உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் பிரேதத்தை, களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.ஜீவராணியின் உத்தரவுக்கமைய இன்று சனிக்கிழமை(22) சடலத்தைப் பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம், பிரேத பரிசோதனைக்குட்படுத்தும்படி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.