மழை நீர் வடிந்தோடி சேதமடைந்த வீதியில் கிடந்த மண்ணை திருடிச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய எல்லைக்குட்பட்ட நாவலடி ஸஹ்வி கார்டன் வீதியிலே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் பெய்த மழையால் அவ் வீதி வழியாக மழைநீர் வடிந்தோடியதில் வீதி சேதமடைந்து மண் குவிந்த நிலையில் கிடந்துள்ளது.
அதனைக் கண்டு கொண்ட திருடர்கள் இரவு நேரத்தில் உழவு இயந்திரத்தில் வந்து அந்த மண்ணை ஏற்றிச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இவ்வாறானதொரு சம்பவம் கடந்த வருடமும் அதே வீதியில் இடம்பெற்றதாகவும், அது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.
எனவே, தொடர்ந்தும் மழை நீரால் குறித்த வீதி சேதமடையாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி வீதியை புனர்நிர்மாணம் செய்து தருமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.