( லக்ஷன்)
மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் ஐயா உயிர் 16 நீத்த வது ஆண்டு நினைவு மட்டக்களப்பில் ஆளுமை மிக்க தலைவரை இழந்து வேதனையான நினைவு 16 வது நிகழ்வில் நிற்கின்றோம் இலங்கைத் தமிழரசு கட்சியின் வாலிப முன்னணி மட்டக்களப்பு மாவட்ட தலைவர் திபாகரன் தெரிவித்தார்.மேலும் உரையாற்றுகையில்
பாராளுமன்றத்திலும் படுகொலைக்கு நீதி கேட்டோம்!
ஐ நா சபையினிலும் ஆண்டெல்லாம் முறையிட்டோம்!
சர்வதேசமெல்லாம் சங்கதியை எடுத்துரைத்தோம்!
நீதி கிடைக்கவில்லை நினைவை மட்டும் கூருகிறோம்!
இன்று 16 வருடங்கள் வழமைபோன்று பிரார்த்தித்து கொண்டு இருக்கின்றோம்
யாழ்பாணத்தில் 1934 நவம்பர் 26 ம் திகதி பிறந்த ஜோசப்பரராஜசிங்கம் ஐயா கிழக்குமாகாணத்தில் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் திருமணம் முடித்து மட்டு மண்ணில் பாராளுமன்ற உறுப்பினராக வாழ்ந்ததுடன்
வடக்கு கிழக்கிற்கு இணைப்பு பாலமாகவும் திகழ்ந்த இந்த மாமனிதர் கடந்த 2005 ம் ஆண்டு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து நத்தார் ஆராதனை வேளையில் இவர் சில கயவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
வடக்கு கிழக்கிற்கு இணைப்பு பாலமாகவும் திகழ்ந்த இந்த மாமனிதர் கடந்த 2005 ம் ஆண்டு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து நத்தார் ஆராதனை வேளையில் இவர் சில கயவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
அன்றிலிருந்து நாம் இன்றுவரை நீதிக்காக நாம் போராடிக்கொண்டிருக்கிறோம் ஆனால் இதுவரை அதற்கான நீதி கிடைக்காதது வேதனையான விடயம்
எம்மைப் போன்ற பல இளம் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக இவர் வாழ்ந்ததுடன் இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ர தலைவர்களில் ஒருவராக செயலாற்றி எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் முன்னின்று உழைத்த தலைவர்களுள் இவரும் ஒருவர்.
நாம் இங்கு இவரை பற்றி சுட்டிகாட்ட வேண்டிய விடயம் ஆரம்பத்தில் ஆங்கில ஆசிரியராக தமது சமுக பணியை ஆரம்பித்த இவர் அறுபதுகளில் தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்த இவர் தான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் தனது மனைவியார் பெயரில் (திருமதி சுகுணம் ஜோசப்) கட்டுரைகளை எழுதிவந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர இவர் எழுதிய கட்டுரைகள் பல அப்பகுதியில் மிகவும் பிரசித்தமானவை.
மட்டக்களப்பில் 90ம் ஆண்டு இடம் பெற்ற பல தமிழ் மக்கள் மீதான படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் சர்வதேத்திற்கு கொண்டு சென்ற மட்டக்களப்பு ஒரே ஒரு தலைவர் இவர் ஆகும் இது இவரின் சாணக்கிய அரசியலையும் மொழி பாண்டித்தியத்தையும் இது காட்டுகின்றது
குறிப்பாக படுவான்கரை பெருநிலத்தில் கடந்த 1991 யூண் 12ம் திகதி மகிழடித்தீவில் இடம்பெற்ற படுகொலையை சர்வதேச ரீதியாக வெளிக்காட்டியது மட்டுமன்றி அதற்கான ஒரு ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கத்தால் அமைப்பதற்கு அழுத்தம் கொடுத்தவரும் இவரே
இவ்வாறான மறைந்த தலைவர்களின் வரலாறுகள் தியாகங்கள் இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும் எமது கட்சி மாத்திரம் தான் கட்சி வளர்ச்சிக்கும் மக்கள் சேவைக்காகவும் பல தியாகங்களுக்கு அப்பால் உயிரையும் தியாகம் செய்கின்றனர்.
இங்கு எம்மத்தியில் ஏழும் கேள்வி எமது தலைவர்கள் படுகொலை செய்யப்படும் அளவிற்கு என்ன தவறுசெய்தார்??
தமிழ் மண்ணை நேசித்தத குற்றமா??
தமிழ் மக்களை நேசித்தது குற்றமா??
தமிழ் தேசியத்தை நேசித்தது குற்றமா???
(இரா.துரைரத்தினம் ஊடகவியலாளர் அவர்களின் தனது பதிவில் இருந்து ஐயா பற்றி கூறும் போது
கிழக்கு மாகாணத்தில் செய்தியாளர்களுக்கு என உருவாக்கப்பட்ட முதலாவது சங்கம் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தான்.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 2004ஆம் ஆண்டு வரை சமூக அரசியல் ஊடகத்துறை என பல மட்டங்களில் சிறப்பாக செயற்பட்டதை கிழக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அறிவார்கள்.
1980களின் பின் படையினரின் நெருக்குவாரங்களும் கைதுகளும் மனித உரிமை மீறல்களும் அதிகரித்து வந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை பேசுவதற்கு கைது செய்யப்பட்டவர்களை மீட்பதற்கு என நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாரும் இல்லாத அனாதரவான நிலையிலேயே மட்டக்களப்பு மக்கள் காணப்பட்டனர்.
.
அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்தனர். ஆனால் அரச தரப்பு அமைச்சர்களாக இருந்த காரணத்தினாலோ என்னவோ கைது செய்யப்படும் இளைஞர்கள் பற்றியோ அல்லது மனித உரிமை மீறல்கள் பற்றியோ அவர்கள் வாய் திறப்பதில்லை.
அவ்வேளையில் ஊடகவியலாளராக இருந்த ஜோசப் அவர்கள் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பற்றிய விபரங்களை சேகரிப்பதிலும் மனித உரிமை மீறல் சம்பவங்களை திரட்டி சர்வதேச மன்னிப்பு சபை போன்ற சர்வதேச அமைப்புகளினது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
ஊடகவியலாளர் என்ற ரீதியில் பொலிஸ் உயர் மட்டங்களுடன் இருந்த நட்பை பயன்படுத்தி சில இளைஞர்களை அவர் விடுவித்திருந்தார்.
1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பை பெரும் அழிவுக்கு உட்படுத்திய சூறாவளி வீசியது. அந்த சூறாவளியின் பின்னர் பெருந்தொகையான நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு நிவாரணப்பணிகள் நடைபெற்றன. அந்த புனரமைப்பு நிவாரணப்பணிகளில் ஊழல் மோசடிகளும் பெருமளவு இடம்பெற்றது.
ஆளும் அரசியல்வாதிகளின் பக்க பலத்துடன் உயர் அதிகாரிகள் சிலர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தனர். சில கிராமங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டதாக கணக்கு காட்டி பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டன.
நிவாரணத்திற்கென வந்த பால்மா மற்றும் உலர் உணவு பொருட்களை மொத்த விற்பனை வர்த்தகர்களுக்கு விற்று நிவாரணப்பொருட்களை ஏப்பம் விட்டனர்.
இந்த ஊழல் மோசடிகளை ஆதாரங்களுடன் துல்லியமான தரவுகளுடன் சூறாவளி பூராயம் என்ற தலைப்பில் ஜோசப் அவர்கள் தொடர்கட்டுரை ஒன்றை சிந்தாமணியில் எழுதினார்.
புலனாய்வு செய்தி திரட்டல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அக்கட்டுரை ஒரு சிறந்த உதாரணமாகும். இன்றைய இளம் ஊடகவியலாளர்கள் புலனாய்வு செய்தி திரட்டல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அக்கட்டுரை தொடரை தேடி வாசிக்க வேண்டும்.
சூறாவளி பூராயம் என்ற கட்டுரை வெளிவந்த போதுதான் இவ்வளவு பெரிய ஊழல் மோசடி நடந்திருக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.
1990ல் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகும் வரையான காலப்பகுதியில் ஊடகவியலாளராக மனித உரிமை செயற்பட்டாளராக பணியாற்றிய காலமே ஜோசப் அவர்களின் பொற்காலம் என நான் கருதுகிறேன்.
இதற்கு அவரின் மொழிப்புலமையும் துணிச்சலும் தமிழ் பற்றுமே காரணம் என்பேன். என் 40 வருட ஊடக பயணத்தில் எனக்கு வழிகாட்டிகளாக இருந்தவர்களில் மிக பிரதானமானவராக ஜோசப் அவர்களையே பார்க்கிறேன்.
( இரா.துரைரத்தினம்இ ஊடகவியலாளர் )
இவ்வாறாக துணிச்சலுடன் எம் இனத்தின் விடிவுக்காக போராடிய மாமனிதரை இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியால் கடந்த 2012இம் ஆண்டு தொடக்கம் இதே நத்தார் நாளில் இருந்து நாம் நினைவு கூர்ந்து வருகின்றோம்.
எதிர்கால எமது அரசியல் இருப்புக்காகவும் நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும் உயிர் நீத்தவர்களை நாம் நினைவுகூருவதற்கு கடமைப்பட்டுள்ளோம் அவரை போன்று எம் மண் விடியலுக்காக உயிர்நீத்த அனைவரையும் நாம் நினைவுகூரும் போது அவர்களின் தியாத்தின் பதிவுகள் எமது இளைய சந்ததிகளுக்கு வரலாற்றை மீட்பதற்கு ஒரு வாய்பாக அமையும்.
இந்த உன்னத பணியை எமது வாலிபர் முன்னணி எமது மூத்த உறுப்பினர்களின் எமது தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைமையுடன் இணைந்து செயல்படுவோம் என்பதையும் கூறுவதில் பெருமை படுகின்றோம்
எமக்கேன்று தேசியம் அமைத்திடுவோம்
அது தமிழ் தேசியமாக இருக்கட்டும்
அதில் துரோகிகளும் துரோகங்களும் இல்லாதிருக்கட்டும்
அன்றே மலரும் தூய தமிழ் தேசியம்