மட்டக்களப்பு நகரை முற்றுகையிட்ட விவசாயிகள் -பொலிஸாரின் கட்டுப்பாட்டையும் மீறி மாவட்ட செயலகம் முற்றுகை

மட்டக்களப்பில் நகருக்குள் பேரணியாக நுழைந்த விவசாயிகளினால் மாநகரத்தில் பதற்ற நிலைமையேற்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் முற்றுகையிடப்பட்டது.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு மற்றும் செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிகளிலிருந்து பேரணியாக மட்டக்களப்பு மாநகருக்கு வருகைதந்தனர்.

சுமார் 100க்கும் மேற்பட்ட உழவு இயந்திரத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களிலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தொங்கவிட்டவாறு இந்த பேரணி நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பசளையினை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த பேரணிகள் மட்டக்களப்பு நருக்குள் நுழைய முற்பட்ட நிலையில் மட்டக்களப்பு விமான நிலைய சுமைதாங்கி பகுதியிலும் ஊரணி சந்தியிலும் பொலிஸாரினால் தடைகள் ஏற்படுத்தப்பட்டு உழவு இயந்திரங்கள் செல்வதற்கான அனுமதிகள் பொலிஸாரினால் மறுக்கப்பட்டது.

இதன்போது விவசாயிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலையேற்பட்டபோது விவசாயிகள் தாங்கள் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தமாட்டோம் நாங்கள் அமைதியான முறையில் எங்களது போராட்டத்தினை முன்னெடுக்கின்றோம்,எங்களை தடுத்தால் வீதியை மறித்து போராட்டம் நடாத்துவோம் என வீதியினை மறித்து அதில் அமர்ந்திருந்து போராட்டம் நடாத்த முற்பட்டனர்.

அதனை தொடர்ந்து பொலிஸார் அவர்களை நகருக்கு செல்ல அனுமதித்த நிலையில் அமைதியான முறையில் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு காந்திபூங்கா வரையில் ஊர்வலமாக வந்து பின்னர் மத்திய வீதியூடாக வாவிக்கரை வீதியை சென்றடைந்து அங்கிருந்து மாவட்ட செயலகம் வரையில் பேரணியானது சென்றது.

மாவட்ட செயலகத்தின் வாயிற்கதவை பொலிஸார் பஸ் கொண்டு மறித்தபோது அதற்கு எதிராக விவசாயிகள் கடுமையான ஆட்சேபனையினை தெரிவித்ததுடன் குறித்த பஸ்ஸை அகற்றாவிட்டால் குறித்த பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கப்போவதாகவும் விவசாயிகள் எச்சரித்ததை தொடர்ந்து குறித்த பஸ் அங்கிருந்து அகற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து பொலிஸார் மாவட்ட செயலகத்திற்குள் செல்வதை தடுத்தபோதும் முன்வாசல் ஊடாக மாவட்ட செயலக வாசல் வரையில் விவசாயிகள் கோசங்களை எழுப்பியவாறு சென்றபோதிலும் மாவட்ட செயலக உள்வாசல் கதவினை பூட்டி பொலிஸார் விவசாயிகள் உள் நுழைவதை தடுத்தனர்.

இதன்போது மாவட்ட செயலகத்திற்குள் யாரும் உள்நுழைய முடியாதவாறு வாயிற்கதவினை முற்றுகையிட்டு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.சுமார் ஒரு மணி நேரம் இந்த முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் மகஜரையும் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

முற்றுமுழுதாக சேதனப்பசளை திட்டம் என்பதை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் 50வீதம் சேதனப்பசளையினை வழங்கினால் 50வீதம் யூரியாவினை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

சேதனப்பசளை திட்டத்தினை நாங்கள் எதிர்க்கவில்லை.ஆனால் முழு நிலத்திலும் சேதனப்பசளை செய்கை செய்யமுடியாது.அவ்வாறான நிலங்களுக்குகு யூரியாவினை வழங்க அரசாங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.