மழையுடனான வானிலை தொடரும்- வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை...!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மாத்தளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


நாட்டைச் சூழவுள்ள பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வழங்கப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பாக   அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.


காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 


நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.


புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.


இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.


150 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் , கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் , மாத்தளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சியும் பதிவாகக் கூடும். ஏனைய பிரதேசங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும்.


மண்சரிவு எச்சரிக்கை

பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதற்கமைய பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , காலியில் நாகொட, பத்தேகம, நெலுவை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , களுத்துறையில் அகலவத்தை, புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , கண்டியில் யட்டிநுவர, பஸ்பாகே கோரள, கங்காவத்தை கோரள, உடுநுவர, தொலுவ, ஹரிஸ்பத்துவ, உடபலாத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்  மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.


அதே போன்று கேகாலையில் யட்டியாந்தோட்டை, அரநாயக்க, புளத்கொஹூபிட்டி, கேகாலை, ருவன்வெல்ல, ரம்புக்களை, மாவனெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , குருணாகலில் மல்லவப்பிட்டி மற்றும் மாவத்தகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , மாத்தளையில் ரத்தோட்டை மற்றும் உகுவெல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , இரத்தினபுரியில் கலவான மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.


இரு வாரத்தில் 4000 பேர் பாதிப்பு

நாட்டில் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி முதல் இம்மாதம் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கடும் மழை, காற்று, வெள்ளம், மின்னல் தாக்கம் , மண்சரிவு என்பவற்றின் காரணமாக நாடளாவிய ரீதியில் 1143 குடும்பங்களைச் சேர்ந்த 4391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த காலப்பகுதியில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 12 வீடுகள் முழுமையாகவும், 635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.