நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை முதல் சகல பாடசாலைகளும் முழுமையாக திறக்கப்படவுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தின் பின்னர் ஏற்பட்ட புத்தாண்டு கொத்தணியின் காரணமாக கொவிட் பரவல் தீவிரமடைந்திருந்தமையின் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டன. அதனையடுத்து கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையிலேயே நாளை முதல் சகல வகுப்பு மாணவர்களுக்குமான கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கொவிட் தொற்று அச்சுறுத்தலின் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய ஒக்டோபர் 21 ஆம் திகதி முதற்கட்டமாக 200 க்கும் குறைவான மணவர்களைக் கொண்ட பாடசாலைகள் திறக்கப்பட்டன.
அதனையடுத்து 1 - 5 வரையான வகுப்புக்களுக்கு மாத்திரம் கற்பித்தல் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து கடந்த 8 ஆம் திகதி முதல் தரம் 10 - 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைகளை இலக்காகக் கொண்டு இந்த மாணவர்களுக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதற்கமைய கடந்த இரு வாரங்களாக ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கும் , உயர்தர மாணவர்களுக்கும் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருந்த நிலையில் , நாளை முதல் 6 - 9 வரையான வகுப்பு மாணவர்களுக்கு கல்வி செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பிக்கப்படவுள்ளன.
இவ்வாறு சகல வகுப்பு மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் , அது குறித்த விசேட சுற்று நிரூபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கோ அல்லது ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்தினருக்கோ கொவிட் தொற்று ஏற்பட்டால் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் அல்லது பாடசாலை நிர்வாகத்தினருக்கு கொவிட் தொற்று அறிகுறிகள் ஏற்படுமாயின் அவர்கள் முதலில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அறிகுறியுடையோர் முழு நேரமும் முகக் கவசத்தை அணிந்திருப்பது அத்தியாவசியமானதாகும்.
அதன் பின்னர் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு அறிவிக்கப்பட வேண்டும். அத்தோடு பாடசாலை நிர்வாகம் இது குறித்து பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். பிரதேச சுகாதார அதிகாரிகள் நிலைமையை ஆராய்ந்து கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகித்தால் அன்டிஜன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இதன் போது மாணவர்களுக்கு தொற்றுறுதி செய்யப்படுமாயின் அவர்கள் பெற்றோரின் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தொற்றுறுதி செய்யப்படுபவர்களுடன் நேரடி தொடர்பினைப் பேணியவர்கள் 10 நாட்களுக்கு வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். நேரடி தொடர்பைப் பேணியவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களாயின் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.