நோர்வே மற்றும் நெதர்லாந்து நாட்டு தூதுவர்கள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம்...!!


நோர்வே மற்றும் நெதர்லாந்து நாட்டு தூதுவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகர சபைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.


கொவிட் சூழ்நிலையின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நோர்வே மற்றும் நெதர்லாந்து நாட்டு தூதுவர்கள் இன்றைய தினம்  விஜயமொன்றினை மேற்கொண்டு பல்வேறுபட்ட தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.


அந்த வகையில் மட்டக்களப்பு மாநகரசபைக்கு வருகை தந்த இரு நாட்டு தூதுவர்கள் மற்றும் மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகரசபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.


நோர்வே நாட்டு தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் ( Trine Joranli Eskedal), நெதர்லாந்து நாட்டு தூதுவர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் (Tanja Gonfgrijp) ஆகிய இருவருமே குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.


குறித்த கலந்துரையாடலின் போது  மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வளங்கள் தொடர்பாக மாநகர முதல்வர் தலைமையிலான குழுவினரால் விளக்கமளிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாநகர சபையினால் மாநகர எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள், அபிவிருத்திப் பணிகள் மற்றும்  மக்களுக்கு தேவைப்பாடாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக  கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.