கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை ஒரு இரவில் தரமுயர்த்துவதற்கு அரசாங்கம் தயார் -இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்


கடந்த அரசாங்க காலத்தில் தேர்தலை மையமாக வைத்துக் கொண்டு வரப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தற்போது அவை அரைகுறையாகக் கிடக்கின்ற. இதனால் பல சமூகப் பிரச்சனைகளும் எழுந்துள்ளன. இதனால் அந்த மக்கள் கடனாளியாக்கப்பட்டுள்ளனர் ன இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை ஒரு இரவில் தரமுயர்த்துவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ள நிலையிலும் நல்லிணக்க அரசியல் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் முன்னெடுக்கும் அரசியலே அதற்கு தடையாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் என்னும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிக்கு கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் வீடமைப்பு திட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதல்கட்ட நிதிவழங்கும் நடவடிக்கை இன்று நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் செல்வி ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட 24பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதி இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.இதன்மூலம் 24வீடுகள் அமைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

கோவிட் நெருக்கடிக்கு மத்தியில் சேவைகளை மக்களின் காலடிக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என அரசாங்கம் செயற்படுகின்றது. அதற்காக நாங்கள் பல வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன. 2800 சதுரக்கிலோமீற்றர் கொண்டது மட்டக்களப்பு மாவட்டமாகும்.

இந்நிலையில் கடந்த அரசாங்க காலத்தில் தேர்தலை மையமாக வைத்துக் கொண்டு வரப்பட்ட வீட்டுத்திட்டங்களால் தற்போது அவை அரைகுறையாகக் கிடக்கின்ற. இதனால் பல சமூகப் பிரச்சனைகளும் எழுந்துள்ளன. இதனால் அந்த மக்கள் கடனாளியாக்கப்பட்டுள்ளனர்.அதுபோல் அப்போதைய அரசாங்கம் தேர்தலுக்காக வேண்டி நிதிய அமைச்சின் அனுமதியின்றி, திட்டமிடல் உத்தியோகஸ்த்தர்க்கும், சமூர்த்தி உத்தியோகஸ்த்தர், பதவிகளையும் வழங்கினார்கள். தற்போது அவர்கள் தொழிலின்றி இருக்கின்றார்கள்.

அதேபோல் அப்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்ததற்காக வேண்டி எதுவித அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் வழங்கவில்லை. இறுதியில் அந்த அரசின் ஆட்சிக்காலம் முடிவுறும் தறுவாயில் இருக்கும்போது கம்பெரலிய யுத்தம் என்ற போர்வையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 300 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்தார்கள்.

நான் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்திருந்தால் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாதிருந்திருக்கும். மக்களைத் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. அப்போது 16 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்திருக்காவிட்டால் அப்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியிருக்க முடியும். நினைத்ததைச் சாதித்திருக்க முடிந்திருக்கும்.

அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, உள்ளிட்ட விடையங்களைச் செய்திருக்க முடியும். முறையான இராஜ தந்திர அரசியல் முஸ்லிம்களிடத்தில் தான் உள்ளது. முஸ்லிம்களின் இறந்த உடலை எரிக்கக்கூடாது புதைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழர்களின் போராட்டத்தில் இணைந்தார்கள், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஆளும் கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

அதில் அவர்கள் வெற்றிபெற்றார்கள். இதுதான் இராஜ தந்திரமாகும். தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரே இரவில் தரமுயர்த்துவதற்கு தயாராக உள்ளது. நல்லிணக்க அரசியல் என்று கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ் அரசியல்வாதிகளும், கட்டிப்பிடித்துக் கொண்டு செயற்படுகின்றார்கள்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உட்பட அவர்கள் ஒரு பிரச்னையும் இல்லை என ஒரு வார்த்தை சொன்னால் நாளையே கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும்.

இதனைப் படித்தவர்களும் சிந்திக்க வேண்டும். படித்தவர்கள் விடும் பிழை எமது அடுத்த சந்ததியினரைப் பாதிக்கும். 72 வருட அரசியலில் 58.9 வீதமிருந்த கிழக்குத் தமிழர்களை 38 சத வீதத்திற்கு கொண்டு விடப்பட்டுள்ளது. பல தமிழ் கிராமங்கள் இல்லாமல் போயிருக்கின்றன.

25000 மேற்பட்டவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் செய்கின்றார்கள். இந்த வாரம் மாத்திரம் 4 இற்கு மேற்பட்டவர்கள் மத்திய கிழக்கிலிருந்து சடலங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ளார்கள். இவ்வாறான பாவங்கள் யாருக்கு வரும்.

பேஸ்புக் அரசியல் செய்பவர்கள் நாங்கள் அல்ல. நாங்கள் கிழக்கில் அரசியல் இருபதைத் தக்கவைப்பதற்கான பயணத்தை நாங்கள் செய்கிறோம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவடட அமைப்பாளர் ப.சந்திரகுமார், போதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாகி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஸ்டமாவட்ட முகாமையாளர் க.ஜெகநாதன் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.