மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருக்கு பிணை –நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணை

நீதிமன்ற அவமதிக்கு தொடர்பான வழக்கில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் தயாபரனை 10இலட்சம் ரூபா சரீரரப்பிணையில் செல்ல இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்தது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவனால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலேயே ஆணையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.என்.அப்துல்லாவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.மாநகர முதல்வர் சார்பில் சட்டத்தரணி ஆசாத்,சட்டத்தரணி என்.கமலதாஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி என்.கமலதாஸ்,

மாநகரசபை முதல்வர் என்ற அடிப்படையில் மாநகர கட்டளை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பிரதி முதல்வருக்கு,ஆணையாளருக்கு,பிரதி ஆணையாளருக்கு கையளிப்பு செய்யமுடியும்.அந்தவகையில் மாநகர ஆணையாளராக தயாபரன் தெரிவுசெய்யப்பட்ட காலப்பகுதியில் சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் 10அதிகாரங்கள் ஆணையாளருக்கு கையளிப்பு செய்யப்பட்டிருந்தது.எனினும் தொடர்ந்து மாநகரசபையின் செயற்பாடுகளுக்கு குந்தகமளிக்கும் வகையில் ஆணையாளர் செயற்பட்டதன் காரணமாக மாநகர முதல்வரினால் கையளிக்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறுவதற்கான அதிகாரங்களும் காணப்பட்டதன் அடிப்படையில் ஒரு சபை தீர்மானித்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டன.

இருந்தபோதிலும் தொடர்ச்சியாக அந்த அதிகாரங்களை ஆணையாளர் தொடர்ச்சியாக பயன்படுத்திவரும் நிலையிலும் மாநகரசபையின் கட்டளைச்சட்டத்திற்கு ஏற்பட்ட ஆணையாளர் சபையின் எந்த தீர்மானத்திற்கு எதிராகவும் செயற்படக்கூடாது என்ற ஏற்பாடு காணப்படுகின்றபோதிலும் தொடர்ச்சியாக சபைக்கு எதிராக செயற்பட்டதன் காரணத்தினால் அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டிருந்தன.

இருந்தபோதிலும் மாநகர ஆணையாளர் தனக்கு இல்லாத அதிகாரத்தினை பயன்படுத்தியதன் காரணமாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களின் ஆலோசனையின்பேரில் மாநகரசபையின் ஆணையாளரு{க:கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.குறித்த வழக்கானது 01-04-2021அன்று குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணையின்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களினால் சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றத்தினால் மாநகர ஆணையாளருக்கு வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட 10அதிகாரங்களில் மாநகரசபை ஆணையாளர் தலையீடுசெய்யக்கூடாது என்ற கட்டளையொன்று நீதிபதியினால் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் நீதிமன்ற கட்டளையின் பின்னரும் நீதிமன்ற கட்டளைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.இது தொடர்பில் இது தொடர்பான வழக்கில் நீதிமன்றில் தெளிவுபடுத்தப்பட்டிருந்த பின்னரும் நீதிமன்ற அவமதிப்பு குற்றவழக்கு தாக்கல் செய்யப்பட்டால் அதன் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் பிரதிவாதிக்கு விளக்கமளிக்கப்பட்டதன் பின்னரும் கூட மாநகரசபை ஆணையாளரின் செயற்பாடுகளில் எந்தவித மாற்றத்தினையும் காணமுடியவில்லை.

இது தொடர்பில் மாநகரசபை முதல்வர் அவர்களினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று சிரேஸ்ட சட்டத்தரணி சஹீயின் ஆலோசனையில் சட்டத்தரணி ஆசாத்தினால் கடந்த 29-07-2021அன்று தாக்கல் செய்யப்பட்டதுடன் 19-08-2021அன்று வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் குறித்த வழக்கின் சந்தேக நபரான ஆணையாளருக்கு பொலிஸ் ஊடாக அழைப்பானை அனுப்பப்பட்டிருந்தது.அதனடிப்படையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மாநகர எம்.தயாபரன் நீதிமன்றில் ஆஜராகியிருந்ததுடன் 10இலட்சம் ரூபா பெறுமதியான சரீரரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் குறித்த வழக்கானது 11-10-2021ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.