கந்த புராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் விளங்கிவருகின்றது. கதிர்காமத்தின் வரலாற்றுடன் மட்டுமன்றி இங்கு இடம்பெறும் பூஜை முறைகளும் பண்டைய முறைமையை ஒத்ததாகவே காணப்படுகின்றது.
அதற்கிணங்க நேற்று ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமும் பண்டைய தமிழர்களின் நடைமுறைக்கு அமைவாகவே நடைபெற்றது.
முன்னதாக போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் புவனராஜினால் திருவிழா அறிவிப்பு நிர்வாகத்தினர் பொதுமக்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து ஆலய உட்பகுதியில் கொடியேற்றப்பட்டு வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்பட்டது.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக ஆலய நிர்வாகத்தினர் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
21 தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நடைபெறும் திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.
தங்கவேல் கொண்டுள்ள பேழை அலங்கரிக்கப்பட்டு அதற்கு தினமும் பூஜைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஆலய உள் வீதி வெளி வீதியுலா இடம்பெறவுள்ளதுடன் வள்ளியம்மன் தெய்வானையம்மன் ஆலயங்களுக்கும் பேழை கொண்டுசெல்லப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இம்முறை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நேர்த்திக்கடன் செலுத்துதல்,காவடியெடுத்தல்போன்ற நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருபத்தொரு நாட்களுக்கு நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவம், எதிர்வரும் 22 ஆம் திகதி மட்டக்களப்பு வாவியில் முருகப்பெருமானுக்கான தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.