ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சர்வானந்தன் தலைமையில் நடைபெற்றது.

ஒரு நிமிட இறைவணக்கத்துடன் ஆரம்பமான சபை அமர்வின்போது சென்ற மாத கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு திருத்தங்களுடன் அது நிறைவேற்றப்பட்டது.

இதன்போது ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் குறித்து தவிசாளரினால் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு சபையின் அங்கீகாரம்பெறப்பட்டது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மயானங்களை அளவீடுசெய்து அவற்றிற்கு பெயரிடும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

களுவன்கேணி பகுதியில் பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு மிக மோசமான நிலையிலிருக்கும் சிறுவர் பூங்காவினை புனரமைப்பதற்கான அனுமதியும் சபையினால் வழங்கப்பட்டதுடன் சகல வசதிகளும் கொண்ட சிறுவர் பூங்கா ஒன்றினை ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் அமைக்கவும் இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏறாவூர்ப்பற்று பிரதேசபை ஊடாக மண் விற்பனை செய்வதற்கான ஆலோசனையொன்று மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரினால் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சபை அனுமதியும் கோரப்பட்டது.

குறிப்பாக ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியிலிருந்து கொழும்பு வரையில் மண் விற்பனை செய்யப்படும் நிலையில் இப்பகுதியில் உள்ள மக்கள் அதிக விலைகொடுத்து மண் வாங்கவேண்டிய நிலையுள்ளதாகவும் அதன் காரணமாக பொதுமக்கள் மண்ணை குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கு இந்த வழிமுறை வழியமைக்கும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சேதனப்பசளையினை உற்பத்திசெய்யும் திட்டத்திற்கு அமைவாக சேதனப்பசளையினை உற்பத்திசெய்யக்கூடிய வசதிகள் உள்ளபோதிலும் ஆளணிபற்றாக்குறை காணப்படுவதாகவும் அதனை நிவர்த்திக்ககூடிய வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும் என இங்கு தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று மையலம்பாவெளியில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சிவராம் ஞாபகார்த்த வீட்டு திட்டத்திற்கான வீதியை அமைப்பது குறித்து தவிசாளரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.