அபிவிருத்திகளை துரிதப்படுத்துமாறு பணிப்பு-நீண்ட நாட்களுக்கு பின்னர் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்


கொரனா அச்சுறுத்தல் காரணமாக தாமதப்படுத்தப்பட்டுள்ள பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான முதலாவது  மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (29) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரனின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.இதன்போது கடந்த ஆண்டில் மாவட்டத்தில் மெற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

மேலும் இம்மாவட்டத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவற்றில் கிழக்கு மாகாண சபையின் ஒதுக்கீட்டிலான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. இதுதவிர மாவட்டத்தின் விவசாயிகள் எதிர் கொள்ளும் நீர் பிரச்சினை தொடர்பாகவும், குளங்கள் தொடர்பான அபிவிருத்தி தொடர்பாகவும், காட்டு யானைகளின் தாக்கத்திலிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்க யானை வேலி அமைப்பது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது. 

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட், கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் டினேஸ் கருணாநாயக்க, இராணுவ தரப்பு பிரதானி, கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (திட்டமிடல்), உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள்  ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,

கொவிட் காரணமாக நீண்டகாலமாக அபிவிருத்தி கூட்டங்கள் நடாத்தமுடியாத நிலையிருந்தது.கடந்த வருடம் நவம்பர் மாதத்திற்கு பின்னர் இன்று இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.இதன்போது கிராம மட்டம்,பிரதேச மட்டங்களில் உள்ள பொதுவான அபிவிருத்திகள் சார்ந்த விடயங்களையும் நிர்வாகம் சார்ந்த விடயங்களையும் கலந்துரையாடி முடிந்தவரை கணிசமானவற்றுக்கு தீர்வும்,சிலவற்றிற்கு எதிர்காலத்தில் தீர்வினைப்பெற்றுக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இன்றைய பொருளாதார கஸ்டமான சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியையும் கொவிட் கட்டுப்பாட்டையும் கடந்து நாங்கள் எவ்வாறு முன்னேறமுடியும் என்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளோம்.அடுத்த ஆண்டு ஒரு அமைதியான,வேகமான ஆண்டாக இருக்கும் சாத்தியம் உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பாரியளவிலான நீர்பாசன திட்டங்கள்,வீதி அபிவிருத்தி திட்டங்களில் இருந்த தடைகள் குறித்து ஆராயப்பட்டது.குறிப்பாக கொனராவினால் அபிவிருத்தி திட்டங்களில் ஏற்பட்ட தாமதம் குறித்து ஆராயப்பட்டது.அவற்றினையெல்லாம் விரைவுபடுத்துமாறு பணிக்கப்பட்டது.ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி புனரமைப்பு திட்டம் கணிசமான முன்னேற்றத்தினை அவதானிக்ககூடியதாகவிருந்தது.சுமார் 250கிலோமீற்றர் வீதிகளின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.