மட்டக்களப்பு இந்துக்கல்லூரி ஆசிரியர்களின் மனிதாபிமானம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத்தடையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியான உதவிதிட்டங்கள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பில் உள்ள பாடசாலையொன்று கல்வி வழங்கலுக்கு அப்பால் தனது பாடசாலையில் உள்ள வறிய மாணவர்களின் நிலைமையினை கருத்தில்கொண்டு வறிய மாணவர்களின் குடும்பத்தினருக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கிவைத்தது.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் பாடசாலையில் கல்வி பயிலும் வறிய மாணவர்களின் வீடுகளுக்கு சென்று இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

பாடசாலை அதிபர் எஸ்.சண்டேஸ்வரனின் தலைமையில் ஆசிரியர்களினால் இந்த நிவாரண வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்கீழ் பாடசாலையில் கல்வி பயிலும் 80 வறிய நிலையில் உள்ள குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு சுமார் 1500பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கல்வி நடவடிக்கைகளுக்கு அப்பால் பாடசாலைகள் ஆசிரியர்கள் மேற்கொண்ட இந்த செயற்பாடு அனைத்து பாடசாலைகளுக்கு முன்மாதிரியாகவும் எடுத்துக்காட்டாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.